அழகுயர் திருநோன்பு!
அழகுயர் திருநோன்பு!
நோன்பு........
பூவிதழாய் நற்செயலை
பூமிதனில் துலங்கிடவே
புகழ்மிக்க இறையோனை
போற்றி தினம் வணங்கிடவே;
பொற்புடைய நல்வாழ்வு
புனிதமுடன் விளங்கிடவே
பூந்தென்றல் எழிலுருவாய்
புவிசிறக்க வந்ததுவே!
நோன்பு......
துன்பம் துயரகற்றி
தூக்கம் உணவகற்றி
தொண்டின் தூய்மை நெறி
தொடர்ந்து உயர்ந்திடவே;
பொங்கும் புத்துணர்வில்
பூத்து மணம் கமழ
திங்கள் ஒளி நிலவாய்
தீனவர் போற்ற வந்ததுவே!
நோன்பு......
சூழும் இருள் விரட்டும்
சுவனம் சுடர் பரப்பும்
ஆளும் இறையருளை
அள்ளி தினம் வழங்கும்
அழகிய திருக் குர்ஆன்
லைலத்துல் கத்ர் இரவும்
திங்கள் ஒளி நிலவாய்
தீனவர் பெற்ற பரிசுகளாம்!
சமுதாயக் கவிஞர்
“சீர்காழி இறையன்பனார்”

கருத்துகள்
கருத்துரையிடுக