வேண்டாம் பொய் சத்தியம்

வேண்டாம் பொய் சத்தியம்




إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي الْآخِرَةِ وَلَا    يُكَلِّمُهُمُ اللَّهُ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ





                     இன்றைய கால கட்டத்தில் மனிதன் எத்தனையோ பல பிரச்சனைகளை, சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறான். ஆனால் சில சந்தர்ப்பங்களில் பொய்கள் பலவற்றைக்கூறி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முனைகிறான். எதையும் நிதானிப்பதற்கு முன் அவசரப்பட்டு அந்தப் பொய்யை உறுதிபடுத்தவும் செய்கிறான். அல்லாஹ் குர் ஆனில் ”மனிதன் அவசரக்காரனாகவே இருக்கிறான்” என்று கூறியது பொய்யாகுமா! 

                   சிலர் சத்தியம் என்பது எனக்கு சக்கரைப் பொங்கல் மாதிரி என அலட்சியமாகக் கூறுவர். ஆனால் தேவையின்றி சத்தியம் செய்வதையும், பொய்சத்தியம் செய்வதையும் இஸ்லாம் தடுக்கிறது. ஆனால் சமுதாயம் எதையும் பொருட்படுத்தாது பொய் சத்தியத்தை லேசாக செய்துவிடுகிறது. 

                   நபி(ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அபூதர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மூன்று நபர்களிடம் அல்லாஹ் மறுமை நாளில் பேசமாட்டான், அவர்களை அருள்பார்வை கொண்டு பார்க்கவும் மாட்டான்,அவர்களைத் தூய்மை படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும் எனக்கூறினார்கள். இதையே (திரும்ப, திரும்ப) மூன்று முறை கூறினார்கள். அப்போது நான் அவ்வாறாயின் அவர்கள் நஷ்டத்திற்கும் , இழிவிற்கும் ஆளாகிவிட்டனர். அவர்கள் யார் ? யா ரஸூலல்லாஹ்! என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் , தனது ஆடையை கணுக்காலுக்குக் கீழாக தொங்கவிடுபவன், செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுபவன், பொய் சத்தியம் செய்து தன் சரக்கை விற்பனை செய்பவன் ஆகியோர் என்று கூறினார்கள்.


                                                                         (முஸ்லிம்:171, திர்மிதி)

             நபித்தோழர் அதீ பின் உமைரா அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். 
                  கிந்தா எனும் குலத்தச் சார்ந்த இம்ரவுல் கைஸ்பின் ஆபிஸ்(ரலி) அவர்கள் ஹள்ர மவ்த் எனும் ஊரைச் சார்ந்த ஒருவர் மீது அல்லாஹ்வின் தூதரிடம் ஒரு நிலம் தொடர்பாக வழக்கு தொடுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (நிலம் தனக்குரியது என்பதற்கான) ஆதாரத்தை நிரூபித்துவிட்டு நிலத்தை எடுத்துக் கொள்ளலாம் என ஹள்ர மவ்த்தைச் சார்ந்தவருக்கு தீர்ப்பளித்தார்கள். ஆனால் அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை. பின்பு நிலம் தனக்குரியதே என சத்தியம் செய்தால் நிலத்தை நீ கைப்பற்றிக் கொள்ளலாம் என இம்ரவுல் கைஸ்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்)  அவர்கள் தீர்ப்பளித்தார்கள். உடனே ஹள்ர மவ்த்தைச் சார்ந்தவர் அல்லாஹ்வின் தூதரே அவருக்கு சத்தியம் செய்ய நீங்கள் வாய்ப்பளித்தால் அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லது கஅபாவுடைய இறைவனின் மீது ஆணையாக எனது நிலம் என் கையிலிருந்து பறிபோய்விடும் என்றார். 

                 அப்போது நபி(ஸல்) அவர்கள் ஒருவர் தம் சகோதரருடைய நிலத்தை அபகரிப்பதற்காக பொய் சத்தியம் செய்தால் அவர்மீது வல்லமையும் , மாண்பும் மிக்க அல்லாஹ் கோபம் கொண்ட நிலையிலேயே மறுமையில் அவர் அல்லாஹ்வை சந்திப்பார் எனக் கூறினார்கள். தொடர்ந்து “யார் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிகளையும், சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்கிறாரோ (3:77)  என்ற வசனத்தை ஓதினார்கள். உடனே இம்ரவுகைஸ் (ரலி) அவர்கள் யா ரஸூலல்லஹ்! அதை விட்டுக் கொடுப்பவருக்கு ஏதாவது (நன்மை) கிடைக்குமா? எனக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம், சுவர்க்கம் கிடைக்கும் என பதிலளித்தார்கள். அப்படியானால் அந்த நிலம் முழுவதையும் அவருக்கே நான் விட்டுக் கொடுக்கிறேன் . அதற்கு நீங்களே சாட்சி என இம்ரவுல் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்னது அஹமது, அபூதாவுத்)

                         அற்ப காசுக்காக இன்று  நம் சமுதாயத்தில் பொருளையும் , நிலத்தையும் அபகரித்து பொய் சத்தியம் செய்து வாழ்பவர்கள் எத்தனைபேர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்.ஒரு வியாபாரி காலையில் கடையை திறந்ததிலிருந்து கடையை அடைக்கும் வரை எத்தனை பொய்சத்தியம் செய்கிறார் என்பதை நாம் எண்ணிப்பார்க்க கடமை பட்டிருக்கிறோம். ஒரு பொருளை விற்க வேண்டுமெனில் அந்த பொருளை நான் இவ்வளவுக்குத்தான் வாங்கினேன், அதில் இவ்வளவுதான் கிடைக்கும் என பொய்யாக பல சத்தியங்களை செய்து விற்கிறார்கள். சிலர் தெரிந்தே செய்கிறார்கள் . சிலர் அறியாமல் செய்கின்றனர். நாம்தான் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். 

                        ஒரு உண்மையான வியாபாரி குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மை பேசி , நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வியாபாரி, மறுமைநாளில் நபிமார்கள் , உண்மையாளர்கள், ஷஹீதுகள் ஆகியோருடன் இருப்பார் எனக் கூறினார்கள்.        (திர்மிதி)

                        இவ்வளவு பெரிய சிறப்பு உண்மையான வியாபாரிகளுக்கு கிடைக்கிறது. இன்னொரு ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் நவின்றதாக ரிபாஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். தன்னுடைய வியாபாரத்தில் இறையச்சத்துடன் நடந்து கொண்டவர்கள், நன்மையை மேற்கொண்டவர்கள், வாய்மையைக் கடைபிடித்தவர்கள் ஆகிய இம்மூவரைத் தவிர மற்றெல்லா வியாபாரிகளும் மறுமை நாளில் பாவிகளாக எழுப்பப்படுவார்கள்.     (திர்மிதி)

           ஆகவே, அன்பிற்குரியவர்களே! நாம் பொய் சத்தியம் செய்யும் வழக்கம் இருந்தால் அப்பழக்கத்தை அல்லாஹ்விற்காக் கைவிடுவோம். அப்படி இல்லையென்றால் மறுமையில் அல்லாஹ் நம்மை கைவிட்டு விடுவான். 
                
               நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அருளினார்கள்: மூன்று பேருடன் அல்லாஹ் நாளை மறுமையில் பேசமாட்டான், அவர்களை பார்க்க மாட்டான், அவர்களை தூய்மைபடுத்தவும் மாட்டான் அவர்களுக்கு வதைக்கும் வேதனை உண்டு. அவர்கள்: தமது தேவைக்குப் போக எஞ்சிய தண்ணீரை வழிப்போக்கருக்கு தராமல் தடுத்தவர், மற்றொருவர் (தமது) சரக்கை விற்பனை செய்வதற்காக அஸர் தொழுகைக்குப் பின் (மக்கள் கூடும் நேரத்தில்) பொய் சத்தியம் செய்தவர், வேறொருவர், ஆட்சித்தலைவரிடம் (உலக ஆதாயத்திற்காக) விசுவாசப் பிரமாணம் செய்துகொண்டவர். (தாம் விரும்பியதை) தலைவர் கொடுத்தால் விசுவாசமாக நடப்பார். கொடுக்காவிட்டால் விசுவாசமாக நடக்க மாட்டார்.                                                            (முஸ்லிம்- 173, புகாரி- 2358, 2672, 7212)

                    ஆகவே, இதைப் படித்துப் பார்க்கிற சிந்தனையாளர்களே, நாளை அல்லாஹ்வின் பொருத்தம் மட்டும் நமக்கு வெற்றியைத்தரும். ஆக அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக இது போன்ற பாவங்களை தவிர்ந்து கொள்வோம், ஏற்கனவே செய்துவிட்ட சத்தியங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவோம். எல்லாம்வல்ல அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக. (ஆமீன்)





                                                                             தொகுப்பு
மெளலவி. M    . நூர் முஹம்மது பத்ரிய்யீ
இமாம், ஜாமிஆ மஸ்ஜித், கறம்பக்குடி

கருத்துகள்