நோன்பு யாரின் மீது கடமை?
நோன்பு யாரின் மீது கடமை?
எனதருமை இஸ்லாமிய நண்பர்களே! பாக்கியம் நிறைந்த ரமழான் மாதத்தின் 3 ஆம் நாள் தராவீஹில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம் நோன்பு யாரின் மீது கடமை என்பது பற்றிதான்.
நோன்பு என்றால் அல்லாஹ்விற்காக பசித்திருப்பதும், தாகித்திருப்பதும், இன்பம் சுகிப்பதை விட்டு நீங்கி இருப்பதுமாகும். மேலும் தேவையற்ற காரியங்களை விட்டும் தன்னை தடுத்துக் கொள்வதாகும்.
அல்லாஹ்விற்கு மிகப் பிடித்தமான அமல் நோன்பு. நோன்புக்கு நானே கூலி என்று ரப்பு சொல்வதிலிருந்தே நாம் நோன்பின் அந்தஸ்தை விளங்க வேண்டும். இந்த நோன்பில் மட்டும்தான் முகஸ்துதியை பார்க்க முடியாது. மற்ற அமல்கள் கூட முகஸ்துதியை (பிறருக்காகவோ, அல்லது பிறரின் பாராட்டை பெறவோ, பிறருக்கு) காட்டவோ செய்யமுடியும். ஆனால் நோன்பு மட்டும் ஒரு அடியான் தன் ரப்புக்காக, அவனது அன்பை பெறுகின்ற நோக்கில் இருக்கும். அதனால்தான் இறைநேசர்களும் , நல்அடியார்களும் நோன்பு நோற்ற நிலையிலேயே தன் ரப்புவை சந்திக்க ஆசைப்பட்டனர்.
மேலும் அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகிறான்:
(28:68) وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ
உமது இறைவன் தான் நாடியதை படைக்கிறான். அவன் தேர்ந்தெடுக்கவும் செய்கிறான். இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் தன் அடியார்கள் நோன்பு நோற்பதற்காகவும், தன் அருளை பொழிவதற்கும், தன் இரக்கத்தை காட்டவும் இந்த ரமழானை அவனே தேர்வு செய்திருக்கிறான். இப்படி அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட மாதத்தில், அல்லாஹ்விற்கு மிகப் பிடித்தமான அமலான நோன்பை அற்ப காரணங்களைச் சொல்லி நாம் விட்டுவிடுகிறோம்.இதனால் அல்லாஹ்வின் அன்பை விட்டு மிக தூரமாகிவிடுகிறோம்.
ஆகவே தேவையில்லாமல் தகுதியற்ற காரணங்களைச் சொல்லி நோன்பை விடக்கூடாது. ஷரீஅத் ஒரு ஐந்து நபர்களுக்கு மட்டும் நோன்பை விடுவதற்கு அனுமதி தருகிறது. மேலும் விட்ட நோன்புக்காக என்ன செய்ய வேண்டும் என்கிற தகவலையும் தருகிறது.
ஷரீஅத்தால் ஃபர்ளான நோன்பை விடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டவர்கள்.
فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ :2:185
1. கடுமையான நோயாளி:
நோன்பு நோற்க சக்தி பெறாத அளவில் ஒருவர் (ஆணோ,பெண்ணோ) நோய்வாய்ப்பட்டால் அவர் நோன்பை விடுவதற்கு மார்க்கம் அனுமதி தருகிறது.
(தன்னுடைய நோய் குணமானதற்குப் பிறகு தான் விட்ட நோன்புகளை களாச் செய்ய வேண்டும்) .
2. பிரயாணி:
அதாவது 77 கி.மீ (48 மைல்) தொலைதூரம் பயணம் செய்யக்கூடிய பிரயாணி (ஆணோ, பெண்ணோ). அவர் எதில் பயணம் செய்தாலும் சரி. (அதாவது விமானத்திலோ,பேருந்திலோ,கப்பலிலோ) அவருக்கு நோன்பை விடுவதற்கு மார்க்கம் அனுமதி தருகிறது.
3. முதுமையை அடைந்துவிட்ட வயோதிகர்:
அதாவது (ஆணோ, பெண்ணோ) இனிமேல் தன் வாழ்நாளில் நோன்பு நோற்க முடியாது என்ற நிலையை அடைந்துவிட்ட வயோதிகர். நீண்ட நேரம் பசித்திருக்க முடியாத ,தாகிக்க முடியாத தள்ளாத வயதை அடைந்தவர். அவர் நோன்பை விடுவதற்கு மார்க்கம் அனுமதி தருகிறது.
இவர்கள் தான் விட்ட ஒரு நோன்புக்குப் பகரமாக ஒரு ஏழைக்கு இருவேளை உணவளிக்க வேண்டும். இதற்குப் பெயர் ஃபித்யா என்று சொல்லப்படும். ஃபித்யாவை கிரயமாகவும் கொடுக்கலாம்.
ஒரு நோன்புக்குரிய ஃபித்யாவுடைய தற்போதைய மதிப்பு ரூ.100/- ஆகும்.
ஃபித்யா கொடுக்கும் அளவு வசதி இல்லையென்றால் மட்டும் அவர்கள் ஃபித்யா கொடுக்க தேவையில்லை.
4. குழந்தையை சுமக்கும் கர்ப்பிணிப் பெண்:
தான் நோன்பு நோற்றால் தனக்கும் தன் வயிற்றில் உள்ள சிசுவுக்கும் ஏதேனும் இடையூறு ஏற்படும் என்றால் இவர்கள் நோன்பை விடுவதற்கு மார்க்கம் அனுமதி தருகிறது.
(குழந்தையை ஈன்றெடுத்த பின் விட்ட நோன்புகளை களாச் செய்ய வேண்டும்.)
5. தன் குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்:
தாய் நோன்பு வைப்பதால் தனக்கும் தன் குழந்தைக்கும் இடையூறு ஏற்படும் என பயந்தால் நோன்பை விடுவதற்கு மார்க்கம் அனுமதி தருகிறது.
(இவர்கள் தன் குழந்தையின் பால்குடி பருவம் முடிந்தபின் களாச் செய்ய வேண்டும்.)
பொதுவாக பால்குடி பருவம் என்பது இரண்டு ஆண்டுகளாகும்.
அல்லாஹ் தன் அருள்மறையில்
(2:233) وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْن
“தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுவார்கள்.(2:233)” என்று கூறுகிறான். எந்த குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் பரிபூரணமாக பாலூட்டப் படுகிறதோ அந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். எந்த நோயும், வைரஸும் அவனை தாக்காது.
இந்த ஐந்து நபர்கள் அல்லாமல் மேலும் இரண்டு பேர்கள் நோன்பை நோற்கக் கூடாது என ஷரீஅத் சொல்கிறது.
1. மாதாந்திர உதிரப் போக்கு ஏற்பட்ட பெண்கள் (periods time)
2. பிரசவத்திற்குப் பின் உதிரப்போக்கு ஏற்பட்ட பெண்கள் (after delivery)
இவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தொழுகை இல்லாத காலங்களில் தொழுகையை விடுவதைப் போல நோன்பையும் விடவேண்டும். ஆனால் சுத்தமானதற்குப் பின் தொழுகையை களாச் செய்ய தேவையில்லை. நோன்பை களாச் செய்ய வேண்டும்.
இந்த வருட நோன்பை களாச் செய்யும் முன் அடுத்த வருட நோன்பு வந்துவிட்டால் தவறில்லை. அடுத்த வருடமானாலும் விடுபட்ட நோன்புகளை களாச் செய்தாக வேண்டும். நமக்கும் அல்லஹ்வுக்குமான கடமையை நாமே நிறைவேற்ற வேண்டும்.
மேலே கூறப்பட்ட நபர்கள் அல்லாமல் வேறு யாரும் நோன்பை விடுவதற்கு அனுமதியில்லை என்பதை உணர்ந்து கடமையான நோன்பை அல்லாஹ்விற்காக நிறைவேற்றி சுவனத்தை அடையும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக! ஆமீன்.

கருத்துகள்
கருத்துரையிடுக