உலகின் தலைசிறந்த நூல்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا
كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّهِ
ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று அரஃபா பெருவெளியில் தனது இறுதிப் பேருரையில் நபிமுஹம்மது (ஸல்) அவர்கள் அருளிய வார்த்தை: நான் இரண்டு விஷயங்களை உங்களுக்கு மத்தியில் விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழிகேட்டில் செல்லமாட்டீர்கள். அந்த இரண்டு விஷயம் ஒன்று அல்லாஹ்வின் திருவேதம், மற்றொன்று என் வழிமுறை (ஸுன்னா) என்றார்கள் .
ஸுன்னா என்ற இந்த இறைநபி போதம் என்பது அண்ணல் நபி(ஸல்) அவர்களின் ஒவ்வொரு அசைவையும் குறிக்கும். இவைகளைக் குறித்த தொகுப்பே ஹதீஸ்கள் என்று அழைக்கப்படுகிறது. நபி(ஸல்) அவர்களின் போதனைகள், சொற்கள், செயல்கள், அவர்களின் ஒப்புதல்கள், மற்றும் ஒப்புதல் மறுத்தல்கள் ஆகியவற்றின் தொகுப்புதான் ஹதீஸ் ஆகும். இவைகளை தொகுத்து நூல் வடிவில் பதிவு செய்யப்பட்ட நூல்கள்தான் ஹதீஸ் கிரந்தங்கள்.
அப்படி தொகுக்கப்பட்ட பல கிரந்தங்கள் இருப்பினும் உலகளாவிய நிலையில், அறிஞர்கள் மற்றும் ஆலிம் பெருமக்கள் அனைவராலும் மறுப்பேதுமின்றி ஒப்புக்கொள்ளப்பட்ட பிரதானமான கிரந்தங்கள் ஸிஹாஹுஸ்ஸித்தா என்று அழைக்கப்படும் ஆறு ஹதீஸ் கிரந்தங்கள். அவற்றுள் தலையாய இடம் பிடித்து முதன்மை கிரந்தமாக திகழ்வதுதான் இமாம் புஹாரி (ரலி) அவர்களால் தொகுக்கப்பட்ட ஸஹீஹ் அல்புஹாரி எனும் ஹதீஸ் கிரந்தம் ஆகும்.
இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் தன்காலத்தில் ஹதீஸ்கலை வல்லுனர்களின் முன்மாதிரியாக இருந்தார்கள். அவர்களின் காலத்தில் ஹதீஸ்கலையில் மிகவும் பிரபல்யமாக திகழ்ந்தவர்கள் இமாம் அஹமது இப்னு ஹம்பல் (ரஹ்) , இமாம் யஹ்யா இப்னு முயீன்(ரஹ்) , இமாம் அலீ இப்னுமதீனி ஆவார்கள். எனினும் ஹதீஸ்களுள் ஸஹீஹான ஹதீஸ்களை மட்டும் பிரித்து அதனை நூல் வடிவம் தந்தவர்களில் முதலாமவர் இமாம் புஹாரி(ரஹ்) ஆவார்கள்.
இமாம் புஹாரி(ரஹ்) அவர்களின் பிறப்பும், பாரம்பரியமும்:
இமாம் புகாரி என்று மக்களால் போற்றப்படும் அம்மாமேதையின் புனிதப்பெயர்:
அபூ அப்தல்லாஹ் முஹம்மது இப்னு இஸ்மாயில்இப்னு இப்ராஹீம் இப்னு அல் முஙீரா இப்னு பர்திஸ்பாஹ் அல் ஜுஃபி.
இவர்கள் புஹராவில் பிறந்ததினால் புஹாரீ எனும் காரணப் பெயரால் அழைக்கப்பட்டார்கள்.
தந்தை பெயர்:
இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் இப்னு அல் முஙீரா இப்னு பர்திஸ்பாஹ் அல் ஜுஃபி.
இமாம்புஹாரீ(ரஹ்) அவர்களின் முப்பாட்டனார் முஙைரா இப்னு பர்திஸ்பாஹ் ஜூஃபி அவர்கள் ஆரம்பத்தில் மஜூஸியாக இருந்தார்கள். பிறகு அவர்கள் அக்கால புஹாரா நாட்டின் அரசராக இருந்த யமாலுல் ஜூஃபி என்பவரின் கையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். இதன் காரணமாகவே அவர்களுக்கும், அவர்களின் வழிவந்த இமாம் புஹாரி (ரஹ்) அவர்களுக்கும் ஜூஃபி என்று கூறப்படுகிறது.
பிறந்த இடம் ,தேதி:
ஹிஜ்ரி 194 ஷவ்வால் பிறை 13 ல் (19/ஜூலை/கி.பி 810 )(மாவாராவுன் நஹ்ர் எனும் மழாலத்தில்) இன்றைய உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா எனும் ஊரில் பிறந்தார்கள்.
இமாம் புஹாரியின் ஆரம்ப காலம்:
இமாம் புஹாரியின் குழந்தை பருவத்திலேயே அவர்களின் தந்தை அவர்களை விட்டும் மறைந்து விட்டார்கள் . பிறகு அவர்களின் தாயாரே அவர்களை வளர்த்து வந்தார்கள். புஹாரி இமாம் அவர்கள் சிறுவயதில் தன் பார்வையை இழந்துவிட்டார்கள். எனவே அவர்களின் தாயார் அப்போது இருந்த பெரும் பெரும் மருத்துவர்களிடம் சென்று மருத்துவம் செய்தும் அவர்களின் பார்வை திரும்பவில்லை. மே3லும் இமாம் புஹாரியின் தாயார் அவர்கள் அதிக வணக்க வழிபாடு செய்பவர்களாகவும், உலக பற்றற்றவர்களாகவும் இருந்ததினால், இறைவனிடம் அதிகம் அழுது, மன்றாடி தன் பிள்ளைக்கு பார்வை கிடைப்பதற்காக துஆ செய்துகொண்டே இருந்தார்கள்.
ஒரு நாள் இரவு தூங்கும் வேளையில் அவர்கள் தம் கனவில் ஹஜ்ரத் இப்ராஹிம் (அலை) அவர்களை பார்க்கும் பாக்கியம் பெற்றார்கள். அப்போது இப்ராஹிம்(அலை) அவர்கள் நீர் அதிகம் அழுது, இறைவனிடம் துஆ செய்து கொண்டே இருந்ததினால் உன் பிள்ளைக்கு பார்வை திரும்பி விட்டது என்ற சுபச்செய்தியை கூறினார்கள். பிறகு அதேபோன்று அதிகாலையில் இமாம் புஹாரி அவர்கள் தன் படுக்கையிலிருந்து எழுந்திருக்கையில் அவர்களுக்கு பார்வை வந்து விட்டது. (அஷிஹத்துல் லம்ஹாத்)
கல்விப்பருவம்:
மார்கத்தின் அத்தியாவசிய ஆரம்பக் கல்வியை கற்றதற்கு பிறகு, இமாம் அவர்கள் பத்து வயதை அடைந்தபோது அல்லாஹ் அவர்களின் மனதில் ஹதீஸ்கலையை கற்பதற்கான ஆர்வத்தை உண்டாக்கினான். எனவே,அவர்கள் புஹாரா நாட்டின் ஹதீஸ்கலை பாடசாலையில் சேர்ந்து மிக ஆர்வத்துடனும், கடின முயற்சியுடனும் ஹதீஸ்கலையை கற்றுக் கொண்டார்கள்.
இமாம் புஹாரி(ரஹ்) அவர்களின் ஹஜ் பயணமும், கிதாப் கோர்வையின் ஆரம்பமும்:
இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் பதினைந்து வயது வரை புஹாராவில் தொடங்கி அதன்பின் தொடர்ந்து பல ஊர்களுக்கும் அவர்களின் கல்வித்தேடல் பரவலாயிற்று. இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் தனது பதினெட்டாம் வயதில் தன் பெரிய சகோதரர் அஹ்மது இப்னு இஸ்மாயீல் உடனும் , தனது தாயாருடனும் ஹரமைன் வந்தார்கள். ஹஜ்ஜை நிறைவேற்றியபின் அவர்களது தாயார் அவர்களின் மூத்த மகனுடன் ஊருக்கு திரும்பிவிட்டார்கள். ஆனால் இமாம் மட்டும் ஹதீஸ்கலையை கற்க அங்கேயே தங்கிவிட்டார்கள். அவ்வேளையில் தான் இமாமவர்கள் தன் “கழாயஸ் ஸஹாபத்தி வத்தாபியீன்” எனும்நூலை கோர்வை செய்தார்கள். பிறகு இரவுகளில் நபி(ஸல்) அவர்களின் ரவ்ளா ஷரீஃபின் திண்ணையில் அம்ர்ந்து ”தாரீகே கபீர்” எனும் நூலை கோர்வை செய்தார்கள்.
கல்விப்பயணம்:
இமாம் புஹாரி(ரஹ்) அவர்களின் கல்வியின் ஆர்வம் அதிகமாகி நீண்ட தூரங்கள் பயணித்தார்கள். நைஸாபூர், பாக்தாத், பஸரா, கூஃபா, திமிஷ்கு அல்குத்ஸ், அல்ஃபுஸ்தாத், மக்கா, மதீனா போன்ற பெருநகரங்கள் வழியாகவும், இவற்றின் இடையே பல்க், மர்வ், ரை, ஹராத் போன்ற சிறுநகரங்கள் வழியாகவும் பயணித்து புஹாராவை வந்தடைந்து பிறகு மீண்டும் புஹாராவிலிருந்து புறப்பட்டு மக்கா, மதினா சென்று மறுமறை புஹாராவை அடைந்தார்கள். கல்வி கற்க அவர்கள் பயணித்த தூரம்
புஹாரா - பல்க்= 599 கி.மீ
மர்வ் - நைஸாபூர் = 136 கி.மீ
நைஸாபூர் - ரை = 757 கி.மீ
வாஸித் - பஸரா = 364 கி.மீ
கூஃபா - பக்தாத் = 164 கி.மீ
பக்தாத் - மதினா = 1524 கி.மீ
மதினா - மக்கா = 432 கி.மீ
மக்கா - ஜித்தா = 70 கி.மீ
ஜித்தா - ஈதாப் = 130 கி.மீ
ஈதாப் - ஃபுஸ்தாத் = 1073 கி.மீ
ஃபுஸ்தாத் - அஸ்கலான் = 500 கி.மீ
அஸ்கலான் - கீஸாரியா = 118 கி.மீ
கீஸாரியா - திமிஷ்கு = 400 கி.மீ
திமிஷ்கு - பக்தாத் = 913 கி.மீ
பக்தாத் - புஹாரா = 4192 கி. மீ
ஆக மொத்தம் முதல் பயணத்தில் மட்டும் அவர்கள் பயணித்த தூரம் 14544 கி.மீ
நபிமொழித் தொகுப்பிற்காகவும், அதன் கல்விக்காகவும் நமது இமாம் மேற்கொண்ட பயணங்கள் இது.இந்தப்பயணங்களின் இடையே அவர்கள் கண்ட சோதனைகளும் நிகழ்த்திய சாதனைகளும் ஏராளம்.
இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் தனது பயண அனுபவங்களை கூறுகிறார்கள்: நான் கடைசியாக எட்டாவது முறையாக பக்தாதை சென்றடைந்தேன். எல்லா தடவைகளிலும் இமாம் அஹ்மதிப்னு ஹன்பல் அவர்களிடம் அமர்வது வழக்கம். கடைசியாக அவர்களிடம் விடைபெற்ற போது , அபூ அப்தில்லாஹ்! இந்தக் கலையையும் இந்த மக்களையும் இங்கே விட்டுவிட்டு குராஸானுக்குச் செல்கின்றீர்களா? என்றுகேட்டார்கள்.
மேலும் இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மக்கா, மதினா, பாக்தாது போன்ற பெருநகரங்களின் அறிஞர்களில் ஆயிரம் பேரை விட அதிகமானவர்களை நான் சந்தித்துள்ளேன். பற்பல காலங்கள் கடந்த இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் அவர்களை நான் சந்தித்தேன். ஏறத்தாழ நாற்பத்தாறு ஆண்டுகள் கடந்த பின்னும் அவர்கள் தங்கள் வார்த்தையில் உறுதியோடு இருந்தார்கள்.
இமாம் புஹாரி(ரஹ்) அவர்களின் ஆசிரியர்கள்:
இமாம் புஹாரி(ரஹ்) அவர்களின் ஆசிரியர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. ஆசிரியர்களின் எண்ணிக்கை ஓராயிரத்தை விடவும் அதிகமானதாகும். (1080 ஆசிரியர்கள் என்று கணிக்கப்படுகிறது) எனினும் இமாமவர்கள் ஹதீஸை கேட்ட அவர்களின் காலத்தில் மாபெரும் ஹதீஸுக் கலை மேதைகள் புஹாரா நாட்டில் முஹம்மது இப்னு ஸலாம், அப்துல்லாஹ் இப்னு முஹம்மது மஸ்னதி, முஹம்மது இப்னு உர்வா, ஹாரூன் இப்னு ஷகப் ஆகியோரும், மேலும் பல்க் நாட்டில் மக்கீ இப்னு இப்ராஹீம், பஷ்ருஜ் ஜாயித், குதைபா ஆகியோரும் மேலும் மர்வ் எனும் ஊரில் அலி இப்னு ஷபீக் அப்தான்,முஆத் இப்னு அஸத், சதகா இப்னு பழ்ல், ஆகியோரும், நைஸாபூர் எனும் ஊரில் யஹ்யா இப்னு யஹ்யா, பிஷ்ரு இப்னு ஹகம், இஸ்ஹாக் (ரஹிமஹுல்லாஹு அலைஹிம்).ஆகியோரும் ஆவார்கள். இன்னும் அவர்கள் சென்ற எல்லா இடங்களிலும் நிறைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
இமாம் அவர்களின் குறிப்பிடத்தக்க சில ஆசிரியர்கள், அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்), இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ் (ரஹ்), இமாம் அஹமது இப்னு ஹம்பல் (ரஹ்), யஹ்யா இப்னு முஈன் (ரஹ்), இமாம் தாகிலி (ரஹ்)...... போன்றோர் ஆவர்.
இமாம் புஹாரி(ரஹ்) அவர்களின் மாணவர்களில் சிலர்:
ஆசிரியர்களின் எண்ணிக்கை போன்று மாணவர்களின் எண்ணிக்கையும் ஏராளம், ஏறத்தாழ ஒரு லட்சம் மாணவர்கள் என கணிக்கப்படுகிறது. இருப்பினும் சில குறிப்பிட்ட மாணவர்களின் பெயர்கள் மட்டும் இங்கு பதியப்படுகிறது, உமர் இப்னு முஹம்மது புஹைரி, அபுபக்கர் இப்னு அபீதுன்யா, அபுபக்கர் பஸ்ஸார், ஹுஸைன் இப்னு முஹம்மது, யஃகூப் இப்னு யூஸுஃப், அப்துல்லாஹ் இப்னு முஹம்மது, ஸஹல் இப்னு ஷாகிர் புஹாரி, உபைதுல்லாஹ் இப்னு வாஸில், காஸிம் இப்னு ஜக்கரிய்யாஹ், அபுகுறைஷ் முஹம்மது இப்னு ஜும்ஆ, இஸ்ஹாக் இப்னு அஹ்மத் ஸர்மாரி, அப்துல் முனீர், அபூஹாதம் ராஜி, மூஸா இப்னு ஹாரூன், அபூஜர்ஆ, முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ், இமாம் நஸாயீ, இமாம் திர்மிதி (ரஹிமஹுல்லாஹு அலைஹிம்).
இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் கோர்வை செய்த இதர நூல்கள்:
இமாமவர்கள் தன் வாழ்வில் பெரும் பகுதியை ஹதீஸ்களின் தேட்டத்திலேயே கழித்தார்கள். ஓரிடத்தில் சற்று நிம்மதியுடன் அமர்ந்துவேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்தது. இருப்பினும் அந்த நெருக்கடியான நேரத்திலும்கூட இமாமவர்கள் பெரு முயற்சியுடன் பல நூல்களை கோர்வை செய்துள்ளார்கள்.
ஹஃபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் இமாம் புஹாரி(ரஹ் அவர்கள் கோர்வை செய்த கிதாபுகளை பட்டியலிட்டு கூறுகிறார்கள். 1.அல்-ஜாமிவுஸ் ஸஹீஹ் , 2. அத்-தாரீகுல் கபீர், 3.அத்-தாரீகுல் அவ்ஸத், 4.அத்- தாரீகுஸ்ஸகீர், 5.கிதாபுல் முஹப்பா, 6.அல்-அதபுல் முஃப்ரது, 7.ஜுஸ்வு ரப்வுல் யதைனி, 8. ஜுஸ்வுல் கிராஅத் கல்பஃல் இமாம், 9.கிதாபுல் அஷ்ரிபா, 10.கிதாபுல் இபாஹ், 11.கிதாபுல் இலல், 12.பிர்ருல் வாலிதைன், 13.அல்-ஜாமிவுல் கபீர், 14.அத்-தஃப்ஸீருல் கபீர், 15.அல்-முஸ்னதுல் கபீர், 16.கல்கு அஃப் ஆலில் இபாத், 17.கழாயாஸ் ஸஹாபா வத்தாபியீன், 18.கிதாபுல் ஃபவாயித். போன்ற நூல்களை தந்துள்ளார்கள்.
இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் தாய் மண் திரும்புதல்:
இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் தன் சொந்த ஊரான புஹாரா திரும்புகிறார்கள். இந்த செய்தி அந்த ஊர் மக்களுக்கு தெரிந்த போது அந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சி ஆனார்கள். இமாம் அவர்களை வரவேற்பதற்காக ஊரின் வெளியே கூடாரம் அடைத்து தங்கி ராஜமரியாதையுடன் அவர்களை வரவேற்றார்கள். தன் ஊர் திரும்பிய பிறகு அங்கு ஒரு பாடசாலை அமைத்து ஹதீஸ்பாடம் நடத்தி வந்தார்கள்.
இமாம் புஹாரி(ரஹ்) அவர்களின் மறைவு:
இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் புஹாராவிலிருந்து ஸமர்கந்துக்கு பயணித்தார்கள். ஸமர்கந்திலிருந்து தூரத்தில் இருக்கும்போதே ஸமர்கந்துவாசிகளில் தன்னை பற்றி இருவிதமான கருத்து பரவுகிறது என்ற செய்தி இமாம் அவர்களுக்கு தெரிந்தவுடன் இமாம் அவர்கள் ஹர்தங் எனுமிடத்தில் தன் பயணத்தை நிறுத்திக் கொண்டார்கள். பிறகு அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்: யா அல்லாஹ்! உன்னுடைய இந்த பூமி விசாலமாக இருப்பதுடன் , என் மீது நெருக்கடியாகிவிட்டது. எனவே என்னை உன்னிடம் அழைத்துக் கொள்வாயாக!
இமாம் அவர்களின் இந்த துஆவிற்குப் பிறகு இமாம் அவர்கள் நோய்வாய்ப் பட்டார்கள். பிறகு இமாம் அவர்கள் ஷவ்வால் பிறை 1, ஹிஜ்ரி 256 ல் தன் 62 ஆம் வயதில் இவ்வுலகை விட்டும் பிரிந்தார்கள்.
reference
ஆமிரி கலீமி புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் நிறைவு விழா மலர் 2019
|
கருத்துகள்
கருத்துரையிடுக