இஃதிகாஃப் அதன் சட்டங்கள்

இஃதிகாஃப் அதன் சட்டங்கள்

                          அன்பான சகோதரர்களே! இந்த பதிவில் நாம் இஃதிகாஃப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இஃதிகாஃப் மொத்தம் மூன்று வகைப்படும்:

1. இஃதிகாஃப் மஸ்னூன்(சுன்னத்தாக்கப்பட்ட இஃதிகாஃப்)

2. இஃதிகாஃப் நஃபில் (நஃபிலான இஃதிகாஃப்)

3. இஃதிகாஃப் வாஜிப் (வாஜிபான இஃதிகாஃப்)  

I. சுன்னத்தான இஃதிகாஃப்

                     ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் கடைபிடிக்கப்படும் இஃதிகாஃபிற்கு சுன்னத்தான இஃதிகாஃப்  எனக் கூறப்படும். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த நாட்களில் இஃதிகாஃப் இருந்துள்ளர்கள். 

இதன் நேரம்:

             ரமளானின் 20 ஆம் நோன்பு நிறைவுபெறுகின்ற நாளின் சூரிய மறைவிலிருந்து பெருநாளின் பிறை தென்படும் வரை நீடித்திருக்கும். எனவே இந்த இஃதிகாஃபை கடைபிடிக்க நினைப்பவர்கள் பிறை 20 மஃரிப்பிற்கு முன் மஸ்ஜிதின் எல்லைக்குள் வந்துவிட வேண்டும். அதாவது சூரியன் மறையும் முன் பள்ளியில் இருக்க வேண்டும்.

               இந்த இஃதிகாஃப் சுன்னத் முஅக்கதா மட்டுமல்ல, சுன்னத் கிஃபாயாவாகும். அதாவது ஒரு ஊர் அல்லது ஒரு மஹல்லாவில் யாராவது ஒரு நபராவது இந்த இஃதிகாஃபை கடைபிடித்துவிட்டால் ஊரில் அல்லது மஹல்லாவில் வாழும்  அனைவரின் சார்பாகவும் சுன்னத் நிறைவேறிவிடும். ஆனால் அந்த ஊரில் அல்லது மஹல்லாவில் யாரும் இஃதிகாஃப் இருக்காவிட்டால் அனைவரின் மீதும் சுன்னத்தை விட்ட குற்றம் ஏற்படும்.

ஊர் அல்லது மஹல்லாவாசிகளின் பொறுப்பு:

                 ஆகவே,  ஒருவராவது   தன் ஊருக்காக இஃதிகாஃப் இருக்க முடிவு செய்து கொள்ள வேண்டும். யாரும் இஃதிகாஃப் இருக்கவில்லையானால் யாரையாவது இஃதிகாஃப் இருக்கும்படி செய்ய வேண்டும். ஆனால் அதற்காக கூலி கொடுத்து இஃதிகாஃப் இருக்கச் செய்யக்கூடாது. ஏனெனில் இபாதத்திற்காக கூலி கொடுப்பதும் வாங்குவதும் ஜாயிஸ் இல்லை.  (ஷாமி)

                  அப்படி யாரும் இஃதிகாஃப் இருக்க முன்வராத போது பக்கத்து மஹல்லாவிலிருந்து ஒருவரை தயார் செய்து நமது பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்க ஏற்பாடு செய்யலாம். வேறு மஹல்லாவாசிகள் இஃதிகாஃப் இருப்பதாலும் இந்த மஹல்லாவாசிகளின் இஃதிகாஃப் இன்ஷாஅல்லாஹ் நிறைவேறிவிடும். (ஃபதாவா தாருல் உலூம்)

இஃதிகாஃப் இருப்பவர் கவனிக்க வேண்டியது.

            இஃதிகாஃப் மஸ்ஜிதின் எல்லைக்குள் இருக்க வேண்டும். 

            மார்க்கம் அனுமதித்துள்ள தேவைகளைத்தவிர வேறு                                தேவைகளுக்காக ஒரு நொடி கூட மஸ்ஜிதின் எல்லையை விட்டும்                வெளியேறினால்   இஃதிகாஃப் முறிந்துவிடும்.  

மஸ்ஜிதின் எல்லை என்பதன் நோக்கம்:

             பள்ளிவாசலை கட்டப்பட்ட போது எந்த இடம் தொழுவதற்காக மட்டும்தான் என முடிவு செய்யப்பட்டு வக்ஃபு செய்யப்பட்டதோ அதுதான் அசல் பள்ளியாகும். சுருக்கமாகச் சொன்னால் பெரும்பாலும் உள்பள்ளிதான்.

                      ஆனால் பள்ளிவாசலின் சில இடங்கள் பள்ளிவாசலுக்கு அவசியமானதாக இருக்கும். ஆனால்,  பள்ளிவாசல் எல்லைக்குள் வராது.

        உதாரணமாக, ஒழு செய்யும் இடம், குளியலறை, கழிப்பறை, ஜனாஸா தொழவைக்கும் இடம், கபருஸ்தான், இமாமின் தங்கும் அறை போன்ற இந்த இடங்களெல்லாம் மஸ்ஜிதின் எல்லைக்குள் வராது.

மார்க்கம் அனுமதித்துள்ள தேவைகளாவன:

       ஷரீஅத் இஃதிகாஃப் இருப்பவருக்கு அத்தியாவசிய சுய தேவைகளுக்காக மஸ்ஜிதை விட்டு வெளிவருவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக வெளிவருவதன் மூலம் இஃதிகாஃப் முறிந்துவிடாது. அந்த தேவைகள் என்ன என்பதை பார்ப்போம்.  

1. மலஜலம் கழிப்பதின் அவசியத்திற்கு, 

2. ஸ்கலிதம் ஏற்பட்டு குளிப்பு கடமையாகி குளிக்கச் செல்வதற்கு, 

3. ஒழு செய்வதற்கு, 

4. தனக்காக உணவு எடுத்துவர யாரும் இல்லாத போது உணவு எடுத்து வருவதற்கு       

5. முஅத்தினாக இருப்பின் பாங்கு சொல்வதற்கு, 

6. தான் இஃதிகாஃப் இருக்கும் மஸ்ஜிதில் ஜும்ஆ நடைபெறாத போது ஜும்ஆ தொழ வேறு பள்ளிக்கு செல்வதற்கு, 

7. மஸ்ஜித் இடிந்து விழுந்துவிடும் என்ற பயம் இருக்கும்போது வேறு மஸ்ஜிதிற்கு மாறி செல்வதற்காகவும் மஸ்ஜிதைவிட்டு வெளியேறிச் செல்லலாம். இந்த தேவைகளன்றி வேறுதேவைகளுக்காக வெளியேறிச்  செல்வது கூடாது.

ஜனாஸா தொழுகை நோயாளியை நலன் விசாரித்தல் இதற்காக வெளிசெல்லலாமா?

                          ஜனாஸா தொழுகையை நிறைவேற்றும் அல்லது நோயாளியை நலன் விசாரிக்கும் நிய்யத்துடன் மஸ்ஜிதை விட்டு வெளிவந்தால் இஃதிகாஃப் முறிந்துவிடும். ஆனால் சுயதேவையை நிறைவேற்றும் எண்ணத்துடன் வெளியில் வரும்பொது அந்த வழியிலே ஜனாஸாவில் கலந்துகொண்டாலோ, நலன் விசாரித்தாலோ இஃதிகாஃப் முறியாது.(ஷாமி)

                          மேலே சொல்லப்பட்ட அனைத்து சுய தேவைகளுக்காகவும் வெளியில் சென்றால் தேவை முடிந்ததும் விரைவாக பள்ளிக்குள் வந்துவிட வேண்டும்.
                         
                        தன் தேவையை நிறைவேற்ற செல்லும் வழியில்  நோயாளியை நலன் விசாரிக்கும் நிலை ஏற்பட்டால் அதற்காக நிற்கக் கூடாது. நடந்துகொண்டே விசாரிக்க வேண்டும்.ஏனெனில் ஹஜ்ரத் ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃபின் போது நடந்துகொண்டே நலம் விசாரித்தார்கள் அதற்காக நிற்கவில்லை.         (அபூதாவூத்) 

II. இஃதிகாஃப் நஃபில்

  
              இந்த இஃதிகாஃப் எல்லா நேரங்களிலும் இருக்கலாம். இதற்கு நோன்பு அவசியமில்லை. நாம் எந்த பள்ளிக்குள் சிறிதுநேரம் நுழைந்தால் கூட இஃதிகாஃப் நிய்யத் செய்து கொள்ளலாம்.

III. இஃதிகாஃப் வாஜிப்


              இந்த இஃதிகாஃப் நேர்ச்சை செய்வதால் வாஜிபாகிவிடும். அல்லது சுன்னத்தான இஃதிகாஃபை இடையில் முறிந்துவிட்டால் அதை திரும்ப நிறைவேற்றுவது வாஜிபாகும். இதில் நோன்பு நோற்பது அவசியம்.
   
பெண்களின் இஃதிகாஃப்
            
             பெண்கள் தங்கள் இல்லங்களிலேயே இஃதிகாஃப் இருக்க வேண்டும். அதாவது பெண்கள் தங்கள் வீடுகளில் தொழுவதற்காக பயன்படுத்தக்கூடிய அறைகளிலோ, அல்லது வீட்டின் ஓரங்களிலோ இஃதிகாஃப் இருக்க வேண்டும். தன் சுய தேவைக்காகவோ அல்லது தனக்கும் தன் குடும்பத்தார்க்கும் உணவு தயாரிக்கவோ தன் அறையை விட்டு வெளிவர வேண்டும். அப்படி வெளியே வரும் சமயத்தில் தேவையற்றதை பேசுவதோ, அரட்டையடிப்பதோ கூடாது. தேவை முடிந்ததும் தன் இருப்பிடம் சென்று இஃதிகாஃபை தொடர வேண்டும்.


இஃதிகாஃபை முறிக்கும் காரியங்கள்

          மேலே சொல்லப்பட்ட  காரணங்கள் ஏதுமின்றி பள்ளிவாசலை விட்டு வெளியேறுவது

           ஆண், பெண் உடலுறவு கொள்வது அல்லது இச்சையுடன் தொடுவது இன்னும் இச்சையுடன் முத்தமிடுவது.

            பெண்களுக்கு மாதாந்திர உதிரப்போக்கு அல்லது பிரசவ உதிரப்போக்கு ஏற்படுதல் 

இஃதிகாஃபில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது

            இஃதிகாபில் இருப்பவர்கள் திருக்குர்ஆனை அதிகம் ஓதுவது

            அதிகமாக திக்ர் செய்வது
           
             நபி(ஸல்) அவர்கள் மீது அதிகமாக ஸலவாத் ஓதுவது

          ஃபர்ளான , நஃபிலான அனைத்து தொழுகைகளையும் பேணித்தொழுவது.

            கிதாபுகளை முதாலஆ (வாசிப்பு) செய்வது

            இரவுத்தொழுகைகளை சரிவர நிறைவேற்றுவது

             அதிகம் பாவமன்னிப்பும், துஆவும் செய்வது

 LOCKDOWN  நேரத்தில் இஃதிகாஃப் 

               நம் வாழ்வில் கண்டிராத அளவு மிகப்பெரிய நோய் தொற்று காரணமாக  நீண்டநாள் தனிமையில் நம் வீடுகளில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இப்போது பள்ளிவாசலுக்கு தொழுவதற்குக்கூட செல்லமுடியாத வகையில் மிகப் பெரிய பாக்கியமற்றவர்களாக இருக்கிறோம். 
                        இத்தருணத்தில் பள்ளிவாசலின் ஊழியர்களுக்கு வணக்கம் புரிய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் நமது ஊரில் அல்லது நமது மஹல்லாவில் ஆர்வமுள்ள ஓரிரு நபர்கள் மட்டும் இஃதிகாஃப் இருப்பதற்கு நிர்வாகப் பெருமக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் 15 வயதிற்கு உட்பட்ட சிறார்களை அனுமதித்தல் கூடாது.

              அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன் , வெகுவிரைவில் நம் அனைவரின் வாழ்வும் இயல்புநிலைக்கு திரும்பி பள்ளிவசலுக்குசென்று தொழக்கூடியவர்களாக அல்லாஹ் ஆக்குவானாக. மேலும் தீராத நோய்களை விட்டும், திடீர் மரணங்களை விட்டு நம்மையும், நம் குடும்பத்தார்களையும், அனைத்து மக்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக 

                  

                                                              

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குர்பானியின் சட்டங்கள் (ஹனஃபி)

ரெகமெண்டேஷன் (பரிந்துரைத்தல்)

நோன்பு யாரின் மீது கடமை?