நல்லோர்களும் ,நாமும் ஒன்றா?


நல்லோர்களும், நாமும் ஒன்றா?


قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ 

عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا   

(السورة ورقم الآية: الكهف (110).

                    மனித சமூகத்தை பல கோத்திரங்களாக, பல பிரிவுகளாக,  நிறத்தால், அமைப்பால், பொருளாதாரத்தால், மொழியால் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளோடு அல்லாஹ் படைத்திருந்த போதும் மனிதர்கள் அனைவர்களின் மீதும் தன் கருணையை, அன்பை உலகில் சமமாகவே அருளுகிறான். எனினும் யார் தன்னுடைய கட்டளைகளை உலகில் செவி தாழ்த்தி, அடிபணிந்து,உலகப்பற்றற்று வாழ்கிறார்களோ அவர்களின் மீது தனிப்பெரும் அன்பை பொழிகிறான். அப்படி அல்லாஹ்வால் தனிப்பெரும் அன்பு போற்றப்பட்ட நபிமார்கள் இன்றளவிலும் நம்மோடு வாழுகிற  எத்தனையோ நல்அடியார்கள் அல்லாஹ்வின் பேரன்பில் இருக்கிறார்கள்.
                                                            
               அப்படிப்பட்ட நபிமார்களையும் ,நல்அடியார்களையும்  நம் வழ்வோடு  ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. ஷீன், ஏ, ரே இம்மூன்று எழுத்துகளையும் உருது மொழியில் சேர்த்து எழுதினால் அதை ஷீர் என்றும் படிக்கலாம், ஷேர் என்றும் படிக்கலாம். ஏனென்றால் அந்த மூன்றும் சேர்ந்து பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் ஷீர் என்றால் பால் என்றும், ஷேர் என்றால் சிங்கம் என்றும் பொருள்படும். பாலை மனிதன் அருந்துகிறான். சிங்கம் மனிதனை கொன்று உண்ணும். இவ்வாறு தவறாக தம்மோடு ஒப்பிட்டுப்பார்க்கும்  கண்ணோட்டத்தின் காரணமாகவே உலகமே வழிதவறியது. சிலர் மட்டுமே நல்லோர்களை அறிந்துகொண்டார்கள்.

                துரதிஷ்ட்ட சாலிகளின் கண்களுக்கு உண்மையைக் கண்டறியும் வலிமை இல்லை. நல்லவர்களையும் பொல்லாதவர்களையும் ஒன்றாகவே பார்த்தார்கள். சமமாக பாவித்தார்கள். அதனால் அவர்கள் வழிதவறிப்போனார்கள். தவறான ஒப்பீட்டின் காரணமாக நபிமார்களும் நம் போன்ற மனிதர்கள்தான் என்று வாதித்தார்கள். நல்லடியார்கள் நம்போன்றவர்களே என்று கருதினார்கள். இதனால் வழிதவறினார்கள். இப்படி தவறாக ஒப்பிடக்கூடாது.

                   ஒரு கடைக்காரன் தன் கடையில் பச்சைக்கிளி ஒன்றை வளர்த்து வந்தான். அதன் பசுமை வண்ணமும், இனிய குரலும், சிவந்த வாயும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அது நன்றாக பேசவும் செய்தது. கடைக்கு சாமான்கள் வாங்க வருவோரிடம் அழகாக பேசி மகிழ்வித்தது கடைக்காரன் வெளியில் சென்றால் கூட கிளி கவனித்துக்கொள்ளும்.

                  ஒருநாள் கடைக்காரன் வெளியில் சென்றுவந்தான். எங்கிருந்தோ வந்த பூனை ஒன்று கிளியைப் பிடிக்கப் பாய்ந்தது. கிளி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேகமாக ஒருபக்கம் சிறகடித்து பறந்தது. அதனால் அருகில் இருந்த விலைவுயர்ந்த பாதாம் எண்ணெய் பாட்டில் கீழே விழுந்து நொறுங்கியது. எண்ணெய் முழுவதும் வீணாகியது. உள்ளே நுழைந்த கடைக்காரன் எண்ணெய் வீணாகியதப் பர்த்து மிகவும் கடுமையான கோபம் கொண்டான். கோபத்தால் கிளியை அதன் தலைமீது தட்டினான். கிளியின் தலையில் இருந்த முடி கொட்டி மொட்டையாகிவிட்டது. கிளிக்கும் ரோஷம் இருக்கும் இல்லையா! கிளி யாருடனும் பேசாமல் இருந்து கொண்டது. கிளி பேசாதது கடைக்காரனுக்கு வேதனை அளித்தது. வரும் வாடிக்கையாளர்களும் ஏன் கிளி பேசுவதில்லை என கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார்கள். கிளியைப் பேசவைக்க கடைக்காரண் பல வகையில் முயன்றான். பல வகையான பழங்களையும் வாங்கிக் கொடுத்தான். ஆனால் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராயின.

                    இந்நிலையில் ஒருநாள் கம்பளி ஆடை அணிந்த ஒருவர் மொட்டத்தலையோடு கடைக்கு எதிரே போய்க்கொண்டிருந்தார். அவரைக்கண்ட கிளி உரத்த குரலில் கேட்டது, ஏ, மொட்டைத்தலையரே! என்ன காரணத்தால் உன் தலை மொட்டையானது? நீயும் எண்ணெய் பாட்டிலை தள்ளி விட்டாயா? எனக்கேட்டது. இதைக்கேட்ட கடைக்காரரும் , வாடிக்கையாளரும் விழுந்து,விழுந்து சிரித்தார்கள். இங்கு கிளி தன் தலை சொட்டையானதைப் போன்றே அவர்தலையும் ஆனது என தன்னோடு அவரை ஒப்பிட்டு பார்த்தது இது கிளியின் அறிவீனம்.

                  இதுபோன்றே நல்லடியார்களையும், நபிமார்களையும் தம்மோடு ஒப்பிட்டு பார்ப்பது தவறு. இப்படி தவறு என்று யார் குரல் எழுப்பினாலும் நாமும் மனிதர்கள்தான் அவர்களும் மனிதர்கள்தான். நாமும் தூங்குகிறோம் அவர்களும் தூங்குகிறார்கள். நாமும் உண்ணுகிறோம் அவர்களும் உண்ணுகிறார்கள். நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் என்ன? என்று கேட்கின்றனர். ஒன்றைப் புரிந்து கொள்வோம், வெளித்தோற்றம் ஒன்றாய் இருப்பதினால் உள்தோற்றம் ஒன்றாயிருக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டிற்குமிடையே பெரிய வேறுபாடும் இருக்கும். இந்த உண்மையை உறுதிபடுத்தும் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

                 வண்டுகளும், தேனீக்களும் மலர்களின் ரசத்தையே உறிஞ்சுகின்றன.
இரண்டு இனத்திற்கும் மலர்களின் ரசம் உணவுதான். ஆனால் வண்டுகளின் வாயில் மலர்களின் ரசம் விஷமாகிறது. தேனீக்களிலோ அது பேரின்பத் தேனாகிறது. 

                    இரு இனத்தச் சார்ந்த மான்கள் ஒரேவகையான புல்லைத்தான் மேய்கின்றன. ஒரு வகை மானிடம் அப்புல் வெறும் புலுக்கைகள் ஆகின்றன. மற்றொரு வகை மானிடமோ அப்புல் மணம் கமழும் கஸ்தூரியாக ஆகிறது.

                கரும்புப் பயிருக்கும், சோளப்பயிருக்கும் பாய்ச்சப்பட்ட தண்ணீர் ஒன்றுதான். அத்தண்ணீர் கரும்பில் இனிக்கும் சாராயிற்று. சோளத்தட்டில் ஒன்றுமில்லாமல் வறண்டு  போயிற்று. 

                நல்லவனும், பொல்லாதவனும் ஒரே உணவைத்தான் உட்கொண்டனர். எனினும் நல்லவன் நெஞ்சில் அவ்வுணவு நல்ல எண்ணங்களை மலரச் செய்தது. தீயவன் நெஞ்சிலோ அவ்வுணவு தீய கருத்துகளை தோற்றுவித்தது. 

                  நல்ல நீரும், உப்பு நீரும் பார்க்க ஒன்றாக இருக்கும் இருப்பினும் இரண்டும் ஒன்றாகுமா? அபூபக்கர்(ரலி) அவர்களும், அபூஜஹ்லும் ஒரே மண்ணில்தான் பிறந்தார்கள்.இருவருக்குமிடையே வித்தியாசமில்லையா?

                  இப்படித்தான் உண்மையை விரும்பாதவர்கள் நபிகளுக்கு அளிக்கப்பட்ட முஃஜிஸா(அற்புதங்களை) மந்திரம், மாயாஜாலத்தோடு ஒப்பிட்டனர். முஃஜிஸா அல்லாஹ்வின் ரஹ்மத் பேரருள். மந்திரம் இறைவனின் லஅனத் சாபம்முஃஜிஸா ஒரு உண்மை தத்துவம். அது நமார்களுக்கு கொடுக்கப்பட்டது. மந்திரம் வெறும் கண்கட்டி வித்தை இது தீயோர்களுக்கும், காஃபிர்களுக்கும் கொடுக்கப்படுகிறது.

                 முஃமினும் தொழுகிறார்,முனாஃபிக்கும் தொழுகிறான் இருவரின் தொழுகையும் ஒன்றா? முஃமின் அடையுமிடம் சுவர்க்கம், முனாஃபிக் அடையுமிடம் நரகம். எப்படி சமமாக முடியும் சொல்லுங்கள்.

                உண்மைத்தங்கமும், போலித்தங்கமும் பார்க்க ஒன்றுபோல்தான் இருக்கும்.ஆனால் உரைக்கல்லிலிட்டால் இரண்டிற்குமிடையே தரவித்தியாசம்,விலை வித்தியாசம் தெரியும்.

              ஆகவே, அன்பானவர்களே! அல்லாஹ்வின் நன்மக்களை நம்மோடு ஒப்பிடக்கூடாது. அவர்களின் அறிவுரைகளையும், செயல்முறைகளையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லாஹு ரப்புல் இஸ்ஸத் அவனுடைய அன்பர்களை கண்ணியப்படுத்தும் நல்ல குணத்தை நம் அனைவர்களுக்கும் தந்தருள்புரிவானாக. அவர்களை தவறான முறையில் ஒப்பிட்டு பார்க்கும் தீயபழக்கத்தை விட்டும் பாதுகாப்பானாக! (ஆமீன்)

                                                                              ஆக்கம்: அறிஞர் ரூமி (ரஹ்)





                                                                                                                                           REFERENCE
ரஹ்மத் மாத இதழ் (ஜனவரி-1996)
                                                        தொகுப்பு: பாரி பாகவி

                   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குர்பானியின் சட்டங்கள் (ஹனஃபி)

இஃதிகாஃப் அதன் சட்டங்கள்

பிழை பொறுப்பாய் ரஹ்மானே!