இமாமுல் அஃளம் அபூ ஹனீஃபா (ரஹ்)

இமாமுல் அஃளம் அபூ ஹனீஃபா (ரஹ்)

                    அன்பான இஸ்லாமிய சொந்தங்களே!  நம் முன்னோர்களாகிய இமாம்கள் அல்லாஹ்வின் உதவியாலும், தங்கள் அயராத ஆராய்ச்சியாலும், தங்கள்  வாழ்நாட்களில் பெரும்பகுதியை செலவழித்து குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை ஆராய்ந்து பல்வேறு மார்க்க சட்டங்களை தொகுத்துத் தந்து மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் குர்ஆன், ஹதீஸின் வழியில் தீர்வுகளை எந்த பிசகுதலும் இல்லாமல் இந்த உம்மத்திற்கு சமர்பித்துச் சென்றுள்ளார்கள். உலகில் பெரும்பாலான முஸ்லிம்கள் இவர்கள் காட்டித்தந்த வழியிலேயே சென்று குர்ஆனையும், சுன்னாவையும் மிக நேர்த்தியாக பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

                           அந்த உயர்வான நான்கு இமாம்களில் கெளரவமிக்க தலைவரான இமாமுல் அஃளம் அவர்களைப் பற்றி ஒருசில தகவல்களை நாம் தெரிந்து கொள்வோம்.

பிறப்பு & பெயர்:


            இராக் நாட்டின் மிகப் பிரபல்யமான நகரமாகிய கூஃபா நகரில் ஹிஜ்ரி 80 ஆம் ஆண்டு ( கி . பி 699 ) , பார்சிக் கோத்திரத்தைச் சார்ந்த சாபித் என்ற நல்லோருக்கு அருந்தவப் புதல்வராக பிறந்தார்கள். தந்தை சாபித் அவர்கள் தன் மகனுக்கு நுஃமான் எனும் சிறந்த பெயரைச் சூட்டினார்கள். அவர்களின் முழு பெயர் நுஃமான் இப்னு சாபித் ஆகும். பின்நாட்களில் அபூ ஹனீஃபா என்று அடையாளமானார்கள்.
                      
                ளாஹிரிய்யாக்கள் என்றழைக்கப்படும்  ஒரு குழுவினர் இமாமவர்களை ”கய்யாஸ்” (அனுமானிப்பாளர், பகுத்தறிவாளர்) எனும் பெயரில் தாங்கள் அழைத்ததுடன் வெளியிலும் அப்பெயரை பிரபல்யப்படுத்தினார்கள்.

அபூ ஹனீஃபா பெயர்க் காரணம்:

                   அபூ ஹனீஃபா என்பது ஹனீஃபாவின் தந்தை என்று பொருள் என நாம் அர்த்தம் கொண்டால் இமாமுல் அஃளம் அவர்களுக்கு ஹனீஃபா என்று குழந்தை இருந்ததா? என்ற வரலாற்று கேள்விக்கு வரலாற்று ஆசிரியர்கள் இமாமவர்களுக்கு “ஹம்மாத்” என்ற பெயரில் மகன் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். ஹனீஃபா என்ற பெயரில் குழந்தை இருந்ததாகத் தெரியவில்லை. 
                   
                  அப்படியானால் அபூ ஹனீஃபா என்ற பெயர் எதனால் ஏற்பட்டது என்ற கேள்விக்கு ”அபூ மில்லதின் ஹனீஃபதின்” மில்லதே ஹனீஃபா என்ற இஸ்லாம் மார்கத்தின் தந்தை என இமாமவர்களின் மாணவர்கள் அழைத்திருக்க வேண்டும். அதில் மில்லத் எனும் சொல் மறைந்து அபூ ஹனீஃபா என்ற பெயரே நிலைத்து விட்டது என்றும், 
                           
                  ஹனீஃபா என்றால் இராக் நாட்டு வழக்கில் அது ”மைக்கூடு” என்று பொருள். இமாமவர்கள் எப்போதும் பேனாவுடனும், மைக்கூடுடனும் காட்சி தருவார்கள் எனும் காரணத்தால் இமாமவர்களை  மைக்கூட்டின் தந்தை - அபூஹனீஃபா என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்க வேண்டும், என்ற இரு கருத்துகளைக் கூறி முதல் கருத்துக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளார் வரலாற்று ஆசிரியர் ஒருவர்.


தொழிலில் ஆர்வம்:


                   இமாமவர்கள் தனது குடும்பத்தொழிலான ஜவுளி வியாபாரத்திலேயே ஈடுபட்டார்கள். இமாமவர்களின் கூரிய அறிவையும், தெளிவான பேச்சையும் கண்ட நல்ல உள்ளம் படைத்த அறிஞர்கள் இமாம் அவர்களுக்கு  முழு நேரமும் வர்த்தகத்திலேயே மூழ்கி இருக்காமல் கல்வி கற்றுக்கொள்வதற்காக சிறிது நேரத்தை ஒதுக்கி உலமாக்களிடம் சென்று வாருங்கள் என்ற நல்ல ஆலோசனையைத் தெரிவித்தனர்.

கல்வியின் ஆர்வம்:

                   இமாமுல் அஃளம் அவர்கள் தாங்களாகவே கூறுகிறார்கள். ஒரு நாள் நான் இமாம் ஷுஅபி (ரஹ்) அவர்களின் வீட்டிற்கு அருகில் சென்று கொண்டிருந்தேன். அப்போது இமாமவர்கள் வீட்டு வாயிலில் அமர்ந்திருந்தார்கள். என்னைப்பார்த்து அருகில் அழைத்து எங்கு செல்கிறீர் என்று வினவினார்கள்.
                              
                    வியாபார நிமித்தமாக கடைவீதிக்குச் செல்கிறேன் என்றேன்.
              
                    “நீர் கடைவீதிக்குச் செல்வதை விட கல்விக்காக உலமாக்களிடம் செல்வதையே நான் அதிகம் நேசிக்கிறேன்” என்றார்கள்.

                     ”சிறிது நேரத்தை கல்விக்காக ஒதுக்கி அந்த நேரத்தில் உலமாக்களிடமும் சென்று வருகிறேன்” என்றேன்.

                      இதைக் கேட்ட அப்பெரியார் “கல்விக்காக உலமாக்களிடம் சென்று வருவதில் சிரமத்தைக் காட்டிவிடாதீர், உலமாக்களிடம் சென்று கல்வியை கற்றுக் கொள்வதிலும், கற்றதைப் பற்றி சிந்திப்பதிலும் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளும். நிச்சயமாக உன்னிடம் விழிப்புணர்ச்சியையும், ஆர்வத்துடிப்பையும் காண்கிறேன்” என்றார்கள்.

                       அப்பெரியாரின் தேனினும் இனிய சொல்லால், உபதேசத்தால் அல்லாஹ் எனக்கு பயனளித்தான். என இமாமுல் அஃளம் கூறி முடித்தார்கள். 

கல்வியைத்தேடிய பயணம்:

                    கல்வியைத் தேடும் ஆர்வமிகுதியால் “இல்முல் கலாம் வல்முனாளரா” மார்க்க விசுவாசம், தர்க்க சாஸ்திரம் போன்ற கலைகளில் பாண்டித்தியம் அடைந்தார்கள்.

                    அதன் பிறகு நபி முஹம்மது(ஸல்) அவர்களின் அன்புக்கு பாத்திரமானவர்களும், நாயகத்தின் பணியாளர் என்ற சிறப்பு பெயரையும் பெற்ற ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்களை ஆசானாகக் கொண்ட ஹஜ்ரத் ஹம்மாத் (ரஹ்) அவர்களிடம் ஃபிக்ஹ் கலையை கற்றார்கள். 


கூஃபாவிலே கல்வியின் தேடல்:


                    அத்தோடு ஃபிக்ஹின் மூலமான - அடிப்படையான ஹதீஸுக் கலையைக் கற்றுக் கொள்ளும் பேரார்வத்தினால் அக்கால கூஃபாவிலே வாழ்ந்த  ஷூஅபீ , ஸம்மாக், ஹிஷாமிப்னு உர்வாஹ், அபூ இஸ்ஹாக் சகபீ போன்ற இருபத்தி எழுவருக்கும் மேலான ஹதீஸுக்கலை வல்லுனர்களிடம் கற்றார்கள்.

மக்காவிற்கு கல்விப் பயணம்:

                     புனித மக்காவில் ஹதீஸுக்கலையைக் கற்றறிந்த மேதைகள் பலர் இருந்தனர். எனினும் அவர்களில் மிகப் பிரபல்யமாக பேசப்பட்டவர்தான் அதாவுப்னு அபீ ரபாஹ்  (ரஹ்) . இவர்கள் தாபியீன்களில் மூத்தவராகவும், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், இப்னு உமர், இப்னு ஜுபைர், அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹும்) போன்ற சங்கை மிக்க சஹாபாக்களின் மூலமும், இரு நூற்றவருக்கும் மேற்பட்ட உத்தம சஹாபாக்களின் மூலமும் ஹதீஸைக் கேட்டும் அவர்களில் பலரை சந்தித்தும் உள்ளனர். இத்தகைய மேன்மைக்குரிய பெரியாரிடம்தான் இமாமுல் அஃளம் ஹதீஸுக் கலையை கற்றார்கள். 

                      அலீ(ரலி), அபூஹுரைரா (ரலி), அபூகதாதா (ரலி) போன்ற சஹாபாக்களிடமும், ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு பணிவிடை செய்யும் பாக்கியம் பெற்றதோடு அவர்களிடமிருந்தும் ஹதீஸுகளைக் கேட்டு தன் சொந்த இஜ்திஹாதில் ஃபிக்ஹு மஸாயில்களைக் கூறும் அளவுக்கு வல்லமைப் பெற்ற இக்ரிமா (ரலி) அவர்களிடமும் இமாமுல் அஃளம் ஹதீஸுக்கலையைக் கற்றார்கள்.

புனித மதீனா நோக்கி கல்விப் பயணம்:

                      பெருமானாரின் புனித உடலைத் தாங்கி இருக்கிற ஒளி மிக்க மதீனாவை ஹிஜ்ரி - 102 ல் சென்றடைந்தார்கள். ”ஸப்அ ஃபுகஹா” என்றழைக்கப்பட்ட ஏழு பெரும் மார்க்க மேதைகள் அக்கால மதீனா முனவ்வராவில் வாழ்ந்து வந்தனர். இஸ்லாமிய உலகில் எழுகிற அனைத்து பிரச்சனைகளுக்கும் அவர்களே தீர்வு கண்டனர். 

                          இமாமுல் அஃளம் மதீனாவை அடையும்போது ஏழு பெரும் மேதைகளில், அன்னை மைமூனா பிராட்டியாரின் பணியாளரான ஸுலைமான் (ரலி) வும், ஃபாரூக் (ரலி) அவர்களின் பேரரான ஸாலிம் (ரலி) ஆகிய இருவர் மட்டுமே ஜீவித்திருந்தனர்.

         இவ்விரு பெரும் மேதைகளுடன் நெருங்கிய தொடர்பைப் பெற்று ஹதீஸுக்கலையை பரிபூரணமாகக் கற்றுத் தேர்ந்து, அதற்குரிய ஸனதும் பெற்றார்கள்.


கல்விச் சேவை:

              ஹதீஸுக்கலையில் பூரண தேர்ச்சி பெற்ற இமாமுல் அஃளம் அவர்கள் , தம் கூரிய அறிவாற்றலாலும், இஜ்திஹாது செய்து மஸாயில்களை எடுத்துரைப்பதாலும் இஸ்லாமிய உலகெங்கும் இமாமின் பெயர் பரவலாயிற்று. உலகின் எல்லா கோணங்களிலிருந்தும் இமாமவர்களிடம் கல்வி கற்க மாணவர்கள் வந்த வண்ணமே இருந்தார்கள். கற்ற கல்வியை அனைவருக்கும் போதித்தார்கள். 

                    கல்வியைத் தேடி அவர்கள் சமூகம் வரும் ஏழை மாணவர்களுக்கு உண்ண உணவும், உடுத்த உடையும், தங்க இடமும் கொடுத்து கல்வி கற்பித்தார்கள். பிரசித்தி பெற்ற நீதிபதியாக பெரும் புகழ் பெற்று இஸ்லாமிய சட்ட திட்டத்தின் அடிப்படை நூல் இயற்றி சிறப்பெய்திய பேரறிஞர் இமாம் அபூயூஸுஃப் (ரஹ்) இவ்வாறு ஏழை மாணவராக இமாமுல் அஃளமிடம் கல்வி கற்றவர்தாம்.


இறுதி காலம்:


               தாஜிர்- ஒரு வர்த்தகராக வாழ்வைத் துவங்கி, முனாளிர்- தர்க்க சாஸ்திரியாக, முதகல்லிம் - மத நம்பிக்கையைப் பற்றி பேசக் கூடியவராக, முஃபக்கிஹ்- சட்ட மேதயாக, முஹத்திஸ் - ஹதீஸுக்கலை வல்லுனராக, முஜ்தஹிதாக, இமாமுல் அஃளமாகத் திகழ்ந்து, அன்று அரசோச்சிய அப்பாஸிய ஹலிஃபாக்களில் ஒருவரான மன்ஸூரின் கொடுங்கோன்மைக்கு பச்சைக் கொடிகாட்டாததால் வெஞ்சிறையில் அடைக்கப்பட்டு, அச்சிறையிலேயே தங்களது அந்தியகால வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்தார்கள்.


மரணமும் , அடக்கப்படுதலும்:


                       ஹிஜ்ரி - 150 ஆம் ஆண்டு (கி . பி . 772), ரஜப் மாதத்தில் தம் 70 ஆம் வயதில் பஃதாது நகரில் தொழுகைக்காக ஸஜ்தாவில் இருந்த நிலையில் வஃபாத்தானார்கள். இமாமின் உடல் ப்ஃதாதின் “கீஜான்” எனும் ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


முடிவுரை:


               இமாம் அவர்களை நல்லடக்கம் செய்த பஃதாது நகரின் நீதிபதி அல்ஹஸனுப்னு அம்மார் அவர்கள், “இப்ராஹீம் நகயீ, ஹம்மாத் போன்ற பெரு மேதைகளுக்கு தாங்கள் ஈடாக இருந்தீர்கள். ஆனால் தங்களுக்கு ஈடாக ஒருவரும் இல்லையே “ என்று வாயார்ந்து கூறினார்கள். 

                இமாம் அவர்களின் மரணம் , அல்லஹ்விற்கு முன் தொழுதவர்களாக, சரித்திரத்தின் முன் கைதியாக, சிந்தனையுள்ள மனிதனுக்கு முன் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்களாக இருக்கும் நிலையில் சம்பவித்தது.

                   யா அல்லாஹ்! இவ்வையகம் அவர்களின் சேவையை ஏற்றுக்கொண்டதைப் போல் நீயும் அவர்களின் சேவையை ஏற்றுக் கொள்வாயாக!   (ஆமீன்)




                                                                             





                                                                                REFERENCE:

ஷரீஅத் மலர்- திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை

ஹிஜ்ரி- 1407       (கி.பி. 1987)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குர்பானியின் சட்டங்கள் (ஹனஃபி)

ரெகமெண்டேஷன் (பரிந்துரைத்தல்)

நோன்பு யாரின் மீது கடமை?