தராவீஹ்..! வேலூர் அல்-பக்கியாத்துஸ் ஸலிஹாத் தீர்ப்பு!

தராவீஹ்..! வேலூர் அல்- பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் தீர்ப்பு!


           அன்பிற்குரிய இஸ்லாமிய சொந்தங்களே! வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மதரஸாவிற்கு விளக்கம் வேண்டி ஒருவர் ஃபத்வா கேட்கிறார்.

கேள்வி:

       “சிலர் தராவீஹ் தொழுகை 8 ரக் அத்கள்தான் எனக்கூறி அதற்கு புகாரி ஷரீஃபை ஆதாரம் காட்டுகின்றனர். அத்துடன் 20 ரக்அத்துகள் என்பதை கடுமையாக எதிர்த்து இருபது ரக்அத் தொழுவோருக்கு மாற்றம் செய்து குழப்பம் செய்கின்றனர்.”

        இதைப்பற்றி மார்க்க அறிஞர்கள் என்ன கூறுகின்றனர்?

           ”தராவீஹ் தொழுகை எட்டு ரக்அத்களா? அல்லது இருபது ரக்அத்களா? இவ்விரண்டில் எது சரியானது என்பது பற்றி உறுதியான முறையில் பதில் தருமாறு வேண்டுகிறேன்.”

பதில்:

         ”சரியான (பதில் கொடுப்ப)தற்கு தவ்ஃபீக் செய்பவன் அல்லாஹ்வே!”

          புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபுதாவூத் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் தராவீஹ் தொழுகை (ரக் அத்)களின் எண்ணிக்கை பற்றி நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் முபாரக்கான வாயினால் கூறிய (கவ்லீ) ஹதீஸ் ஏதுமில்லை.

         புகாரி ஷரீஃபில் ஹளரத் அபூஸல்மா இப்னு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸ் யாதெனில் ஹளரத் அபூ ஸல்மா இப்னு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் உம்முல் முஃமினீன் ஆயிஷா(ரலி) அவர்களிடம் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் எந்த அளவு (எண்ணிக்கையில்) தொழுது கொண்டிருந்தார்கள்? எனக் கேட்டார்கள்.- அதாவது கேள்வியின் பாணி முழு ரமளானை பற்றியதாய் இருந்தது.-அதற்கு அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள், ரமளானிலும், ரமளான் அல்லாத நேரங்களிலும் 11 ரக் அத்கள் (8 ரக் அத்கள் தஹஜ்ஜதுடையது, 3 ரக் அத்கள் வித்ருடையது) தொழுது கொண்டிருந்தார்கள் என பதில் கூறினார்கள்.
               (உம்ததுல் காரீ, வால்:5, பக்கம்: 124)  

         ரமளான் மாதம் அல்லாத மற்ற 11 மாதங்களில் தராவீஹ் தொழுகை இல்லாததால் அது தஹஜ்ஜுத் தொழுகையே என நிரூபணமாகிவிட்டது.அதேபோல ரமளானின் தஹஜ்ஜுத் தொழுகையின் ரக்அத்களின் எண்ணிக்கையும் நிரூபணமாகிவிட்டது. ஏனெனில் உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்கள் ரமளான் மாதம், ரமளானல்லாத மாதங்கள் இரண்டிற்கும் சேர்த்தே பதில் கொடுத்துள்ளார்கள்.

         இரண்டிற்கும் சேர்த்தே பதில் கொடுத்துவிட்டார்கள் என்பது நிரூபணமாகிவிட்டதால் அதன் மூலம் தஹஜ்ஜுத் தொழுகை ரக்அத்துகளின் எண்ணிக்கைதான் நிரூபணமாகிறதே தவிர தராவீஹ் தொழுகை ரக்அத்களின் எண்ணிக்கை நிரூபணமாகவில்லை.

  சிந்தனை சக்தி உடையோர் இந்த ஹதீஸை சிந்திப்பார்களாக!

  தஹஜ்ஜுத் தொழுகை தனியாகவே தொழுது கொண்டிருந்தார்கள்.

       ‘ஸிஹாஹுஸ் ஸித்தா என்ற ஸஹீஹான ஆறு ஹதீஸ் கிரந்தங்களையும் அலசி ஆராய்ந்து நோட்டமிடும்போது, “நாயகம்(ஸல்)அவர்கள் ரமளான் மாதத்தில் மூன்று இரவுகளே ஜமாஅத்துடன் தொழுதுள்ளார்கள்.அல்லாஹுதஆலா அதை ஃபர்ளாக ஆக்கிவிடுவானோ என்ற அச்சத்தினால் தொடர்ச்சியாக முழு ரமளானும் தொழவில்லை” என்பதே தெரிய வருகிறது.

        இப்போது பிரச்சனை; அந்த மூன்று இரவுகளிலும் தராவீஹ் தொழுகை (ரக்அத்)களின் எண்ணிக்கை என்ன? என்பதே!

        ஸஹீஹுல் புகாரியின் விரிவுரையான உம்ததுல் காரீ என்ற கிரந்தத்தில் ஒரு சொல்லின்படி 36 ரக்அத்கள் என்றும், மற்றொரு சொல்லின்படி 20 ரக்அத்கள் என்றும் வந்துள்ளது.

        ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களும், ஏனைய சஹாபாக்களும் இருபது ரக்அத்களே தொழுதுள்ளார்கள்.அவர்கள் இருபது ரக்அத்கள் தொழுதது நாயகம் (ஸல்) அவர்களும் இருபது ரக்அத்கள் தொழுதார்கள் என்பதற்கு ஆதாரமாகும்.

        ஏனெனில் நாயகம் (ஸல்) அவர்கள் எனது ஸுன்னத்(வழிமுறை)களின்படியும்,நேர்வழிபெற்ற குலஃபாயே ராஷிதீன்களின் ஸுன்னத் (வழிமுறை)களின்படியும் அமல் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்கள். (நூல்:அபூதாவூத்)

        இது ”சஹாபாக்கள் இருபது ரக் அத்கள் தொழுதார்கள்” என்பதற்கு உம்ததுல் காரீயின் வாசகமாகும்.

          ”ஹள்ரத் உமர் (ரலி) அவர்களின் காலத்தில் சஹாபாக்கள் இருபது ரக் அத்களாக தொழுதார்கள்” என ஸாயிப் இப்னு யஜீத் என்ற சஹாபியின் வாயிலாக சரியான ஸனதுடன் பைஹகீ ரிவாயத் செய்திருப்பதை ஹனஃபீ, ஷாஃபிஈ, ஹன்பலீ மத்ஹபைச் சார்ந்தவர்கள் ஆதாரமாக எடுக்கின்றனர். 

         நான் கூறுகிறேன்: பைஹகீ(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்: மூன்று ரக்அத்கள் வித்ராக தொழுதார்கள். 
                                      (உம்ததுல் காரீ:பக்கம் - 804)

       நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என்னுடைய உம்மத்தார்- சஹாபாக்கள்- வழிகேட்டின் மீது ஒன்றுசேர மாட்டார்கள்.இன்னும் ஜமா அத் - சஹாபாக்களின் - மீது அல்லாஹ்வின் கை (பேருதவி) இருக்கிறது. யார் சஹாபாக்களின் ஜமாஅத்தை விட்டு தனியாகின்றாரோ அவர் நரகில் நுழைவார்.”
                                   (நூல்: திர்மிதி)

 இருபது ரக் அத்களுக்கு மாற்றமாக குழப்பத்தை உண்டுபண்ணக் கூடியவர்களை அல்லாஹ் விரும்பமாட்டான்.

          ”விஷமத்தை (குழப்பம் செய்வதை ) அல்லாஹ் விரும்புவதில்லை.”                          (அல்குர் ஆன்: 2:205)
             

               அல்லாஹ் மிக அறிந்தவன்.



பதிலளித்தவர்:ஹள்ரத்,முஃப்தி.அப்துல் வஹ்ஹாப் உஃபிய அன்ஹு  






                                                         REFERENCE:
                                   ஷரீ அத் மலர் (24/12/1986)
                               திருச்சி ஜமாத்துல் உலமா வெளியீடு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குர்பானியின் சட்டங்கள் (ஹனஃபி)

ரெகமெண்டேஷன் (பரிந்துரைத்தல்)

நோன்பு யாரின் மீது கடமை?