சரித்திர புகழ் பெற்ற எட்டுத் தூண்கள்
சரித்திரப் புகழ் பெற்ற
எட்டுத் தூண்கள்
அன்பானவர்களே! நமது உயிரினும் மேலான நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா நுழைந்த போது முதன் முதலில் மஸ்ஜிதுன் நபவியை கட்டினார்கள். அந்த பள்ளியும், அதை சார்ந்த இடங்களும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை.
முல்லா அலீ காரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ”மதீனாப் பள்ளியிலுள்ள சிறப்பு தாங்கிய தூண்களையும், மற்றும் புனித ஸ்தலங்களையும் தரிசித்து அங்கு நபில் தொழுகைகளையும் தொழுக வேண்டும். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எந்தப் பகுதி மஸ்ஜிதாக விளங்கியதோ அது மிக முக்கியமான பகுதி. அதில் இடம்பெற்றுள்ள தூண்களும் புனிதம் பெற்றவை. புகாரி ஷரீஃபிலுள்ள ஹதீஸின் படி எட்டுத் தூண்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், புனிதம் பெற்றவையுமாகும். அவற்றுக்கு அருகில் நின்று கண்ணியமிக்க சஹாபாக்கள் தொழுவது வழக்கம்.”
அரபியில் தூண்களுக்கு உஸ்துவானத் என்பர். அந்த எட்டு உஸ்துவானத்துகளையும் வரிசையாக காண்போம்.
1. உஸ்துவானத்து முக்லகா:
அனைத்து தூண்களிலும் இது மிக பரக்கத்தான இடம். இங்கே நின்று நபி(ஸல்) அவர்கள் தொழுவது வழக்கம்.இதற்கு உஸ்துவானத்து ஹனானா என்ற ஒரு பெயரும் வழங்கப்படுகிறது. அந்த இடத்தில் ஒரு பேரித்தம் பழத்தின் அடிபாகம் தூண் போல நின்றிருந்தது. மிம்பர் செய்யப்படுவதற்கு முன் நபி(ஸல்) அவர்கள் அதன் மீது சாய்ந்தவாறு குத்பா பிரசங்கம் செய்வது வழக்கம். மிம்பர் தயாரானதற்குப் பின்னர் குத்பா செய்வதற்காக மிம்பர் மீது ஏறி அமர்ந்தார்கள். உடனே அந்த தூணிலிருந்து உரக்க அழும் சப்தம் கேட்டது. ‘அதன் அழுகுரலால் மஸ்ஜிதே அலறியது’ என ஓர் அறிவிப்பு கூறுகிறது.
அதன் அழுகையால் மஸ்ஜிதில் இருந்தோரும் அழுதுவிட்டார்கள். இதனை அறிந்த நபி(ஸல்) அவர்கள் அதனருகில் வந்து அதன் மீது தன் திருக்கரத்தை வைத்தார்கள். பிறகுதான் அதன் அழுகை சப்தம் அடங்கிற்று. அது அழுததற்குரிய காரணத்தை விளக்கி நபி(ஸல்) அவர்கள் அருளியதாவது: இந்த தூணுக்கு அருகில் அல்லாஹ்வைப் பற்றிய தியானம் நடந்து கொண்டிருந்தது. தற்சமயம் மிம்பர் தயாராகிவிட்டபடியால் இதற்கு அந்த பாக்கியம் கிடைக்காமல் போய்விட்டதை நினைத்து அழுதது. நான் இதன் மீது என் கையை வைத்திராவிட்டால் கியாமத்நாள் வரை இது அழுதுகொண்டுதான் இருக்கும். அப்பால் அந்த தூணை நல்லடக்கம் செய்யப்பட்டது. இது மிகப் பிரபல்யமான சரித்திரம். பத்து சஹாபாக்கள் இந்த சம்பவத்தை அறிவித்துள்ளனர்.
ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் இச்சம்பவத்தை கூறும்போதெல்லாம் கண்ணீர் சிந்தியவர்களாக, அல்லாஹ்வின் அடியார்களே! ஒரு பேரீத்த மரத்திற்கு நபி(ஸல்) அவர்கள் மீது இவ்வளவு பற்றும், பாசமும் இருந்தால் நீங்கள் இதனினும் அதிக அன்பு செலுத்தக் கடமைப்பட்டவர்கள் அல்லவா! எனக் கூறுவார்கள்.(ஷிபா)
” புதிய மிம்பரைத் தயாரித்து ஜும்ஆ தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் அதன் மீது அமர்ந்தவுடன், அந்தத்தூண் எந்த அளவு உரக்கச் சப்தமிட்டு அழுததென்றால் , அது உடைந்து சிதறியதுபோல் தோன்றியது. உடனே நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து கீழிறங்கி அதனைத் தழுவினார்கள். பிறகு அது குழந்தையின் அழுகையை அமர்த்தும்போது தேம்புவது போல் தேம்பியது”. என ஒரு ஹதீஸ் கூறுகிறது. (புகாரி) .
இதற்காகத்தான் இதற்கு உஸ்துவாத்து ஹனானா என்று பெயர். ஹனானா என்றால் அழுகும் ஒட்டகம் என்பது பொருள். பல மணம், நறுமணம் அதன் மீது பூசப்படுவதால் அதற்கு முக்லகா என்ற பெயரும் வழங்கப்படுகிறது. என்று இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
மஸ்ஜிதுந் நபவியிலே தொழுவதற்கு இதுதான் மிகவும் மேலான இடம். இந்த இடத்திலேதான் மிஹ்ராபுந் நபி (ஸல்) என்ற பெயரால் மிஹ்ராப் கட்டப் பட்டிருக்கிறது. இது நபியவர்கள் காலத்தில் இருந்ததில்லை. வலீத் இப்னு அப்துல் மலீகின் ஆட்சியின் கீழ் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் கவர்னராகப் பணிபுரிந்தபோது மஸ்ஜிதுந் நபவியை புணர்நிர்மானம் செய்யப்பட்டது. அந்த தருணத்தில்தான் இந்த மிஹ்ராபும் கட்டப்பட்டது. (நுஸ்ஹதுந் நாழிரீன்)
2. உஸ்துவானத்து ஆயிஷா:
இந்த இடத்தில் முஹாஜிரீன்கள் பெருபாலும் அமருவதை முன்னிட்டு இதற்கு உஸ்துவானத்துல் முஹாஜிரீன் என்ற பெயரும் உண்டு. ஆரம்பத்தில் நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்தில்தான் தொழுதார்கள். பிறகுதான் முன்கூறப்பட்ட இடத்திற்கு மாறினார்கள். இந்த மஸ்ஜிதில் ஓர் இடம் இருக்கிறது அதன் மகிமையை மக்கள் உணர்ந்திடுவார்களாயின் நெருக்கடி தாங்க முடியாமல் சீட்டுப் போடவேண்டிய நிலை உருவாகிவிடும் என்று ஹஜ்ரத் ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். அது எந்த இடம் என பலமுறை கேட்டும் அம்மையார் அவர்கள் கூற மறுத்துவிட்டார்கள். அப்பால் ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களின் வற்புறுத்தலுக்கிணங்க அந்த இடத்தை சுட்டிக் காண்பித்தார்கள். அம்மையார் அவர்கள் சுட்டிக் காண்பித்த இடம் ஆதலால் அவர்களின் பெயராலேயே அந்த இடம் துலங்குகிறது. ஹஜ்ரத் அபூபக்கர்(ரலி), ஹஜ்ரத் உமர் (ரலி) ஆகிய இரு பெரியார்களும் பெரும்பாலும் அந்த இடத்தில் நின்று தொழுவது வழக்கம். அங்கு துஆ ஒப்புக் கொள்ளப்படுகிறது என ஹதீஸில் வருகிறது.
3. உஸ்துவானத்து தவ்பா:
இதற்கு உஸ்துவானத்து அபூ லுபாபா என்ற பெயரும் உண்டு. ஹஜ்ரத் அபூலுபாபா (ரலி) அவர்கள் ஒரு பிரசித்தி பெற்ற சஹாபி , பனூ குரைழா போரில் அன்னார் ஒரு தவறிழைத்துவிட்டார்கள். அதாவது: பனூ குரைழா வர்க்கத்திலுள்ள யூதர்களை முற்றுகையிட்டதில் அவர்கள் தமது தோல்வியை ஒப்புக்கொண்டு ஆயுதங்களை கீழேபோட தயாராகிவிட்டனர். ஹஜ்ரத் அபூலுபாபா(ரலி) அவர்களுக்கு யூதர்களுக்கும் வெகுகாலமாகவே தொடர்பு நிலவி வந்தது. அதனடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் தங்களைப் பற்றி என்ன முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை விசாரித்தறிவதற்காக ஹஜ்ரத் அபூலுபாபா அவர்களை யூதர்கள் அழைத்திருந்தார்கள். அவர்களைக் கண்டதும் யூதர்கள் ’கோ’வென அழுது தங்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன முடிவு செய்திருக்கிறார்கள் எனக் கேட்டார்கள். மனமிரங்கிப்போன அபூலுபாபா அவர்கள் தங்கள் கழுத்தில் கைவைத்துக் காட்டி கொன்றுவிட முடிவு செய்திருப்பதாக சமிக்ஞை செய்துவிட்டார்கள்.
இந்தச் செயல் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கு பெரிதும் உருத்திற்று. எவ்வாறு பெரிய தவறு செய்துவிட்டோம் என வருந்தி, மஸ்ஜிதிற்கு திரும்பிவந்து ஈச்ச மரத்தூணில் தன்னைக் கயிற்றால் பிணைத்துக் கொண்டார்கள். என்னுடைய தவ்பா அங்கீகரிக்கப்படாமல் நான் இங்கிருந்து நகரமாட்டேன். என்னை நபி(ஸல்) அவர்கள்தான் அவிழ்த்து விடுதலை செய்ய வேண்டும் என அறிவித்தார்கள். இந்தச் செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியதும் அபூலுபாபா நேரடியாக என்னிடம் வந்திருப்பின் நான் அவருக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரியிருப்பேன். ஆனால் அவரோ, எனது தவ்பா ஒப்புக்கொள்ளப்படாத வரை இந்த இடத்தைவிட்டு நகரப்போவதில்லை என சபதம் எடுத்துக் கொண்டார். அவ்விதமிருக்க நான் எப்படி அவரை அவிழ்த்து விட முடியும் என அருளினார்கள்.
இப்படி பல நாட்கள் கழிந்தன. தொழுகை மற்றும் மனிதத் தேவைக்காக அன்னாரது மனைவியோ, மகளோ அவிழ்த்து விடுவார்கள். தேவை முடிந்ததும் மீண்டும் கயிற்றால் பிணைத்து விடுவர்.பலநாள் சரியாக உண்ணாமலும், பருகாமலும் இருந்தபடியால் கண்கள் பஞ்சடைத்துப் போயின. காதுகள் சரியாகக் கேட்கவில்லை.
வெகுநாட்களுக்குப் பின் ஓரிரவு நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸலமா(ரலி) அவர்களின் இல்லத்தில் தஹஜ்ஜுத் தொழுது கொண்டிருக்கையில் அன்னாரின் தவ்பா ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி கிடைத்தது. இதை நபி(ஸல்) அவர்கள் அறிவித்ததும் சஹாபாக்கள் ஓடோடிச் சென்று அவிழ்த்துவிட முனைந்தார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்களின் திருக்கரத்தால் அவிழ்த்தாலல்லாது நான் உங்களை அவிழ்க்க சம்மதிக்க மாட்டேன். என அபூலுபாபா(ரலி)அவர்கள் கூறிவிட்டார்கள்.அவ்வாறே, காலை ஸுப்ஹு தொழுகைக்குப்பின் நபி(ஸல்) அவர்கள் வருகை புரிந்து அன்னாரை அவிழ்த்துவிட்டார்கள்.
அந்தத் தூணுக்கு அருகில் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்திருக்கிறார்கள்.பெரும்பாலும் ஏழை, எளியோர் இங்கு அமருவர். அவர்களுடன் கலந்து நபி(ஸல்) சுபுஹுலிருந்து சூரிய உதயம் வரை அமந்திருப்பார்கள்.
4. உஸ்துவானத்து ஸரீர்:
இந்தத் தூணுக்கு அருகிலும் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்திருக்கிறார்கள். பெருமானாரவர்கள் இஃதிகாஃப் இருக்கும் காலமெல்லாம் இரவில் இங்கு ஓர் கட்டிலைப் போட்டு படுத்துக் கொள்வார்கள். ஸரீர் என்றால் அரபியில் கட்டில் என்பது பொருள்.
5. உஸ்துவானத்து அலீ
இதற்கு உஸ்துவானத்து ஹிர்ஸ் என்றும் பெயர். ஹிர்ஸ் என்றால் பாதுகாப்பு என்று பொருள்.சில சஹாபாக்கள் இங்கு அமர்ந்து நபி(ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்தார்கள். ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களுக்கு இந்த தூணுக்கு அருகில் அமர்வது வழக்கமாயிருந்தமையால் ‘அலீயின் தூண் ‘ என வழங்கலாயிற்று. நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா நாயகியின் வீடிலிருந்து வரும் போது இந்த இடத்தைக் கடந்தே செல்வார்கள்.
6. உஸ்துவானத்து உஃபூத்
உஃபூத் என்றால் தூதுகோஷ்டி என்று பொருள். தம்மை சந்திக்க வரும் தூதுகோஷ்டியினரிடம் இங்கே அமர்ந்துதான் நபி(ஸல்) அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.அவர்களுக்கு இஸ்லாமிய சட்ட திட்டங்களைப் போதித்துக் கொடுப்பார்கள்.
7. உஸ்துவானத்து தஹஜ்ஜுத்
இரவு நேரங்களில் ஜனங்களெல்லாம் சென்ற பிறகு நபி(ஸல்) அவர்கள் ஒரு விரிப்பை விரித்து இங்கே தங்கள் தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்றுவார்கள். இங்குதான் புனித ரமளான் மாதம் மூன்று இரவுகளில் தராவீஹ் தொழுதார்கள். ஜனக்கூட்டம் அதிகமானதும் , அது ஃபர்ளாக்கப் பட்டுவிடும் என்ற அச்சத்தில் பின்னர் அதை கைவிட்டு விட்டார்கள். அவ்விதம் தராவீஹ் தொழுத இடம்தான் அது.
8. உஸ்துவானத்து ஜிப்ரயீல்:
இது ஹஜ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் விஜயஞ் செய்யக்கூடிய மிக முக்கிய பகுதியாகும்.
மஸ்ஜிதுந் நபவியிலுள்ள அனைத்து இடங்களும் அண்ணல் நபி(ஸல்) அவர்களுடையவும், அவர்களின் அருமை சஹாபாக்களுடையவும் திருப்பாதங்கள் பட்டு புனிதம் பெற்ற இடங்கள் தாம். ஆயினும் இந்த எட்டுத் தூண்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்கள் என்பதை நினைவு கூற வேண்டும்.
REFERENCE:
ரஹ்மத் மாத இதழ் (மார்ச் - 2002)

கருத்துகள்
கருத்துரையிடுக