பிரார்த்தனை செய்வோம்

பிரார்த்தனை செய்வோம்


 எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழனைத்தும்,   

                              கண்ணியமானவர்களே! உலகத்தார்க்கு அல்லாஹ் பல பொக்கிஷங்களை அருளியிருக்கிறான். அதிலே ஒன்றுதான் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது. ஏனெனில் அல்லாஹ் ஆரம்பமாக தாயின் கருவறையிலே ஒரு மலக்கை நியமித்து அந்த கரு ஆணா? பெண்ணா?, நல்லவனா? கெட்டவனா? அதன் உணவு, மறைவு அதன் பண்புகள் , அது பெறும் அந்தஸ்த்துகள் ஆகியவற்றை தக்தீராக அமைக்கச் செய்கிறான். என்று பெருமானார் (ஸல்) அவர்கள் வாயிலாக நமக்குத் தெரிகிறது. அப்படியிருக்க முடிவு செய்யப்பட்ட தக்தீரை மாற்ற உலகில் யாருக்கும் சக்தி இல்லை. இருப்பினும் நபி(ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸில் இப்படியும் சொல்வார்கள்,


                           (முடிவு செய்யப்பட்ட தக்தீரை துஆவைத் தவிர வேறு எதனாலும் மாற்ற இயலாது)

                         இந்த நபிமொழியின் கூற்றுப்படி தக்தீரை மாற்றும் சக்தி துஆவிற்கு உள்ளது என்பது தெளிவாகிறது.

                  அப்படிப்பட்ட சக்திமிக்க துஆவை நம்மில் எத்தனைபேர் செய்து வருகிறோம்! வாழுகிற வாழ்வில் பல தவறுகளை செய்து வருகிற நாம்  நம் தவற்றை எண்ணி அழுது புலம்பியிருக்கிறோமா? துஆவின் மூலம் தக்தீரையே மாற்ற முடியும் என்பதை விளங்கிய இந்த சமுதாயம் ஏன் துஆவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை? எனவே, நாம் துஆவின் அவசியத்தை உணர்ந்து எல்லா நேரங்களிலும், எல்லாத் தேவைகளையும் அல்லாஹ்விடம் கேட்டுப் பெறக்கூடியவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக!

             துஆவைக் கேட்க ஆரம்பிக்கும் முன் அந்த துஆ அங்கீகரிக்கப்பட ஐந்து விஷயங்கள் மிக அவசியம். 

1. நாம் அல்லாஹ்விடம் கேட்கிறோம் என்ற உணர்வோடு மனதால் (உள்ளத்தால்) கேட்க வேண்டும்.
                           
                     இங்கு ஒரு சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. இஸ்லாமிய ஆட்சியாளர்களில் கொடுங்கோலன் என்று அறியப்பட்டவன் ஹஜ்ஜாஜிப்னு யூஸுஃப். ஒருமுறை அவன் கஃபாவை தவாஃப் செய்யச் செல்லும்போது ஒரு கண் தெரியாத மனிதர் அங்கு வாசலில் நின்றுகொண்டு யா அல்லாஹ் எனக்கு கண்ணைக் கொடு! கொடு!  என உதட்டளவில் துஆ செய்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட ஹஜ்ஜாஜ் அருகில் சென்று தான் யார் என்பதை சொல்லிவிட்டுச்  சொன்னான், ”நான் தவாஃப் செய்துவிட்டு திரும்பி வரும்போது உனக்குக் கண் தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் உன்னை நான் கொலை செய்வேன்” இதனைக் கேட்ட கண்தெரியாதவர் ஹஜ்ஜாஜ் சொன்னால் செய்திடுவான் என தன் உயிருக்கு அஞ்சி அழுது கொண்டே யா அல்லாஹ்! இதுவரை எனக்கு கண்மட்டும்தான் தெரியாமல் இருந்தது இப்போது என் உயிருக்கும் ஆபத்து வந்துவிட்டதே எனக்கு கண்பார்வை கொடு! கொடு ! என உள்ளத்தால் உருகி துஆ செய்தார்.

                              அல்லாஹ்வினால் பார்வை கொடுக்கப்பட்டது. தவாஃபை முடித்துவிட்டு வந்துப் பார்த்த ஹஜ்ஜாஜ் அவரைப் பார்த்து நீ காலம் முழுக்க முன்புபோல் துஆ செய்தால் கண்பார்வை கிடைத்திருக்காது. உள்ளச்சத்தோடு கேட்க வேண்டும் அதற்காகத்தான் உன்னை அவ்வாறு திடுக்கிட வைத்தேன் எனக் கூறிச் சென்றார். எனவே மனதால் துஆ செய்ய வேண்டும்.

2. நீ நாடினால் எனக்குக் கொடு எனக் கூறக்கூடாது.

                   நபி(ஸல்) அவர்கள் நீ நாடினால் எனக்குக் கொடு என பிரார்த்தனை செய்ய வேண்டாம் எனத் தடுத்துள்ளார்கள்.

3. அல்லாஹ் தன் துஆவை நிறைவேற்றவில்லை என நிராசை அடையக் கூடாது.

               நபி மூஸா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னுக்கு எதிராக கேட்ட துஆவை 40 ஆண்டுகளுக்கு பிறகுதான் அல்லாஹ் நிறைவேற்றினான்.

            நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அபூஜஹலுக்கு எதிராக கேட்ட துஆவை 13 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அல்லாஹ் நிறைவேற்றினான்.

               அப்படியிருக்க நாம் மாலையில் துஆ செய்துவிட்டு இரவில் நிறைவேற வேண்டும் என நினைப்பது சரியாகுமா?

4. ஆரோக்கியமான நிலையிலும், நல்ல நிலையிலும் துஆவை மேற்கொள்ள வேண்டும்.

                   சிலர் வாலிபத்தை வீணாகக் கழித்துவிட்டு வயோதிகத்திலும், செல்வ நிலையில் அல்லாஹ்வை மறந்துவிட்டு ஏழ்மை நிலையிலும், ஆரோக்கியமான நிலையில் அல்லாஹ்வை மறந்துவிட்டு நோயுற்ற நிலையிலும், மகிழ்ச்சியான நிலையில் அல்லாஹ்வை மறந்துவிட்டு துன்பமான நேரங்களிலும் அல்லாஹ்விடம் கையேந்துகிறார்கள் . இது மிகவும் தவறு. 

5. உணவு, உடை ஹலாலாக இருப்பது அவசியம்.

                 பெருமானார்(ஸல்) அவர்கள் எவருடைய உடலில் ஹராம் கலந்துவிட்டதோ அவருடைய துஆ ஒப்புக்கொள்ளப்படமாட்டாது என சொல்வார்கள். எனவேதான் சஹாபாக்கள் ஹலால், ஹராம் விஷயத்தில் மிகப் பேணுதலாக இருந்தார்கள். எனவே, ஹராமை விட்டும் நீங்கி தவ்பாசெய்து வாழ்நாள் முழுக்க ஹலாலோடு வாழ அல்லாஹ் நமக்கும் , உங்களுக்கும் தவ்ஃபீக் செய்வானாக!     ஆமீன்

                 இவ்வாறு ஐந்து விஷயங்களைப் பேணி கேட்கப்பட்ட துஆ மூன்று விதங்களில் நிறைவேறும். 

       1. கேட்டது கேட்டபடியே உடனே நடைபெறும் அல்லது வேறு சில ஆபத்துகளிலிருந்து காப்பாற்றப்படுவோம்.

       2. கேட்கப்பட்ட துஆ சில காலம் கழித்து தக்க தருணத்தில் நிறைவேற்றப்படும். (ஒரு தாய்க்கு தன் குழந்தையின் தேவையறிந்து உணவளிக்க தெரிந்ததைப் போல , ரப்புல் இஸ்ஸத் தன் அடியார்களின் தேவையறிந்து தேவை உடைய தக்க நேரத்தில்  தருவான். நாம் அவசரப் படுத்தினாலும் சரியே!)

        3. கேட்ட துஆ உடனேயும் நிறைவேறாது, காலம் சில கழித்தும் நிறைவேறாது. ஆனால் அந்த துஆவின் கூலியை மறுமையில் பன்மடங்காக அல்லாஹ் தருவான். அப்போது மறுமையில் மனிதன் நினைப்பானாம் உலகில் நாம் கேட்ட எந்த துஆவும் அங்கீகரிக்கப்படாமல் இருந்திருக்கலாமே என்று அந்த அளவு மறுமையில் நிறைவேற்றப்படும். 

        எனவே நாம் செய்யும் துஆ மூன்று விதத்தில் ஏதேனும் ஒரு முறையில் நிறைவேறுமே தவிர வீணாகுவதில்லை. அல்லாஹ்வும் வீணாக்குவதில்லை. ஆகவே, அனைவரும் தனக்காகவும் , முழு உம்மத்திற்காகவும் துஆ செய்யுங்கள். வல்ல ரஹ்மான் நம் துஆக்கள் அத்தனையும் அங்கீகரித்து ஈருலகிலும் வெற்றியை வாரி வழங்குவானாக!   ஆமீன் ....





தொகுப்பு:
மெளலவி. M. பீர் முஹம்மது பத்ரிய்யி
இமாம், மஸ்ஜிதே அஃப்ராஸ்
பரமக்குடி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குர்பானியின் சட்டங்கள் (ஹனஃபி)

ரெகமெண்டேஷன் (பரிந்துரைத்தல்)

நோன்பு யாரின் மீது கடமை?